பக்கம்:கனிச்சாறு 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121


மொழிவழி உன்றன் முன்னோர் அதனையே
வழிவழித் தாயமாய் வைத்தனர் என்பதோ,
அடிமையாய்ப் போனபின் அறிந்திலை நீயே!
தடிமையாய்ப் போனதுன் தோலும் மானமும்! 70
விடியாத் தமிழனாய் வீழ்ந்து கிடப்பாய்!
படியாய்ப் போனதுன் முதுகு, பாராடா!

ஆரியன் வந்தான்; அரசைக் குலைத்தான்!
ஊரிலே புகுந்துன் உறவைக் கெடுத்தான்!
தமிழனாய் வாழ்ந்தவன் தலைத்தலைப் பிரிந்தே
உமிழத் தக்க ஒரு நூறு குலமாய்ப்
பிரிந்து தன்பழம் பெயரையும் மறந்தான்!
உரிந்து தள்ளினான், ஊசைப் பார்ப்பான்!
குலத்தைக் காட்டி குனி, நீ என்றான்; 80
நிலத்தைக் காட்டி நிமிர்,உழை என்றான்!
குனிந்தாய் நிமிர்ந்தாய்; குடுமியன் சொற்குப்
பணிந்தாய்; படுத்தாய்; பற்பல கதைகளைச்
சொல்லிக் கிடந்தான்; சொக்கிப் போனாய்!
கல்லி எடுத்தான் மூளையை! கவன்றிலை!

சொல்லில் செயலில் வல்ல நீ, அதன்பின்
பல்லி சொல்லுக்குப் பயன் கேட்டு நின்றாய்!
கல்லை நிமிர்த்திக் கடவுள் என்றாய்!
பொல்லாப் புழங்கதை புழக்கத்தில் வரவும்
கொள்ளை போனதுன் பழந்தமிழ்க் கொடிமரம்!
மொள்ளைகள் பற்பல வந்து முளைத்தன! 90
வேதியர் வேதம் விண்ணையும் ஆண்டது!
சாதிச் சண்டைகள், சமயச் சழக்குகள்,
கல்வியல் வீழ்ச்சி, கடமையில் தொய்வு,
செல்வத் தாழ்ச்சி, சீரழி வெல்லாம்
படிப்படி யாகப் பழக்கத்தில் வந்தன,
பொடிப்பொடி யாகப் போனதுன் பெருமை!

அதன்பின், களப்பிரன், பல்லவன், மராட்டியன்,
புதிதாய் அரபியன், போர்ச்சுக் கீசியன்,
பிரெஞ்சுக் காரன் யாவரும் முறையே
அரசாண்ட பின்னை ஆங்கிலன் வந்தான்! 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/157&oldid=1424779" இலிருந்து மீள்விக்கப்பட்டது