பக்கம்:கனிச்சாறு 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


88  எனக்கென எதுவுமில்லை!

எனக்கென எதுவுமில்லை - இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர! - இவன்
தனக்கொரு நினைவிலனாய் - மிகத்
தாழ்வுற வாழ்வதைத் தவிர்க்கிலனே - எனச்
சினக்கவும் இயல்வதில்லை! - ஒரு
சிரிப்பினில் இகழவும் முடிவதில்லை! - பிற
மனக்குறை எதுவுமில்லை - தமிழ்
மானத்தை மீட்கின்ற நாள்வரையில் - இங்கு
எனக்கென எதுவுமில்லை - இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!

எண்ணவும் திறனிலனாய் - பிறர்
எடுத்துரைத் திடினுமோர் உணர்விலனாய் - மிகத்
திண்ணமாய் உரைத்திடினும் - ஒரு
செயலுக்கு முன்வரும் துணிவிலனாய் - பல
வண்ணமாய் வாழுகின்றான்! - இவ்
வாட்டமே யன்றிவே றெதுவுமில்லை! - தமிழ்
மண்ணிடைத் தோன்றிவிட்டேன்! - பொது
மனத்துடன் எதனையும் நினைத்துவிட்டேன்! - மற்று
எனக்கென எதுவுமில்லை! - இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!

உண்மையில் லாதவனாய் - தான்
உண்ணவும் உடுக்கவும் பிறரிடம்போய் - மனத்
திண்மையி ழந்துவிட்டான்! - ஒன்று
தேறவும் செய்யவும் வாய்ப்பிலனாய் - இழி
பெண்மையின் நடிப்பினனாய் - ஒரு
பேடியைப் போல்இவன் வாழுகின்றான் - என
எண்ணியே வருந்துகின்றேன்! - வேறு
எதனையும் பெரிதென நினைப்பதில்லை! - இங்கு
எனக்கென எதுவுமில்லை - இந்த
இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/182&oldid=1424793" இலிருந்து மீள்விக்கப்பட்டது