பக்கம்:கனிச்சாறு 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


108

வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக!


சாதிப் பேய் அழிந்துவரும் இந்நாளில் ‘பார்த்த
சாரதியார்’ தினமணிசெய் கதிரிதழை ஒவ்வோர்
சாதிக்கும் சிறப்பிதழாய்க் கொணர்கின்றார்; இங்கே
சரிந்துவரும் உணர்வுகளை நிலைநிறுத்து கின்றார்!
‘மோதிக்கொண் டழியட்டும் தமிழரினம்’ என்றே
முழுசூழ்ச்சிப் பார்ப்பனர்க்குக் கரவான எண்ணம்!
ஏ! திக்கெட் டும்ஓடி அடிமையுறுந் தமிழா!
ஏமாற்றுக் கொள்கையினை நீயுணர்தல் வேண்டும்!

படிக்கின்ற இளைஞரிடை, பெண்களிடைச் சாதி
பரவிவரும் இழிநிலையைக் - கேடுகெட்ட போக்கை -
இடிக்கின்ற வகையினிலே தமிழுணர்வைப் பாய்ச்சி
எந்தமிழர் பேரினத்தை ஓரினமாய்ச் செய்க!
துடிக்கின்ற மாணவர்க்குப் பொதுமைநலம் சொல்க!
துவளாத நல்லிளைஞர் மதர்மதர்க்கும் நெஞ்சில்
வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக! அக்கால்
வீணர்களின் முயற்சியெல்லாம் தூள் தூளாய்ப் போகும்!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/204&oldid=1437578" இலிருந்து மீள்விக்கப்பட்டது