பக்கம்:கனிச்சாறு 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


120

வருந்துழல் நெஞ்சமே!


மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் - என
முழுமையாய்ச் செய்திடப் பல நூறு இருக்கையில்,
பழிக்கும் பேச்சுக்கும் சூளுரைக்கும் - எனப்
பாழாய்க் காலத்தை வீணடிக் கின்றனர்!
ஒழிக்கும் முனைப்பில் ஒருவருக் கொருவர்
ஒவ்வொரு நொடியிலும் தாழ்ந்திழி கின்றார்!
அழிக்கும் பகைவரோ தமிழினம் சிதைவதை
அன்றன்றும் மகிழ்ச்சியோ டெதிர்பார்த் திருப்பரே!

இருந்த பேரின இழப்பை மீட்பதா?
எதிரியின் சூழ்ச்சிக்கே இருகண் விழிப்பதா?
மருந்துரை தந்தெம்மின் மக்களைக் காப்பதா?
மற்றெந் தலைவரை மனந்தெருட் டுவதா?
திருந்துமா செந்தமிழ்ப் பேரினம்? முந்தைநாள்
திசையெட்டும் சிதைந்தவர் வந்துகூ டுவரோ?
வருந்துழல் நெஞ்சமே! வழியொன்று சொல்வையோ?
வாழ்நாள் முழுதுமே முயற்சியில் கழிப்பையோ?

-1982


121

மெச்சும் பெரும்பணி!


தமிழுணர்வில்லாமல் தமிழரை இணைப்பது
உமியைப் பிசைந்தே உருண்டை பிடிப்பது!
தமிழரை இணைக்காமல் தமிழர் முன் னேற்றம்
அமையா தென்பதை அனைவரும் உணர்க!
இனத்தை ஒன்றாய் இணைப்பதே இங்குள
அனைத்துத் தமிழர்க்கும் அமைந்த பெரும்பணி!
மனத்தைப் பிளப்பன மதங்களும் சாதியும்!
இனத்தைச் சிதைப்பன இங்குள கட்சிகள்!
கட்சிகள், மதங்கள், சாதிகள் கழன்ற
மெச்சிடும் நிலையே தமிழர்க்கு மேன்மையாம்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/224&oldid=1437422" இலிருந்து மீள்விக்கப்பட்டது