பக்கம்:கனிச்சாறு 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


122

மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் !


மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! - அதில்
ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்!

காசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும்
கவின் தமிழ் ஒன்றே பரப்புவேன்! - இதை
மாசுள்ளம் கொண்டே மதித்திடார் செயல்களை
மண்மே டிட்டே நிரப்புவேன்!

காலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும்
காடுமே டெல்லாம் முழக்குவேன்! - என்
மேலுள்ள அன்பால் எனைப்பற்று வோர்க்கும்
மேலும்மேல் அவ்வினை பழக்குவேன்!

உயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும்
ஒவ்வோர் அணுவிலும் தமிழ்மணம்! - அவை
அயர்வுற்று மறையினும் ஆழ்வெளி பரவினும்
அங்கங்கும் கிளர்ந்தெழும் தமிழினம்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/225&oldid=1437424" இலிருந்து மீள்விக்கப்பட்டது