பக்கம்:கனிச்சாறு 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  193


வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்!
வளந்தரு குறிஞ்சியில் காதலை உணர்ந்தவர்!
தேனுமிழ் முல்லையை மருதம் நெய்தலைத்
தீர ஆய்ந்துநல் இல்லறம் வகுத்தவர்!
கான் தரு பொருளையும் கழனியும் கண்டவர்!
கடலின் பரப்பையும் கடந்தயல் சென்றவர்!
ஏன், தம்பி தெரியுமா? - இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

கல்லைக் கல்லொடு மோதிய கனப்பினர்!
காய்ச்சி இரும்பினை உருக்கிடக் கற்றவர்!
சொல்லைச் சொல்லொடும் பொருத்தி மொழியெனச்
சுடர்விடும் உணர்வினுக் குருவம் வரைந்தவர்!
வில்லைப் புலியினைக் கயலைக் கொடியினில்
வெள்ளைப் பனிமலைத் தலையில் பொறித்தவர்!
எல்லைப் புகழினர் - இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

தொன்று தொட்ட பெருமையின் தோன்றல்கள்!
தோல்வி என்பதே தோன்றிடா வீரர்கள்!
கன்று முட்டிய பாலைக் குடிப்பினும்
காதலில், வீரத்தில் எச்சில், கா ணாதவர்!
குன்றையும் மலையையும் கொடையாய் வழங்கியர்
கோடி இலக்கிய இலக்கணம் கண்டவர்!
என்றோ பிறந்தவர்! - இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

காற்றையும் கையினிற் பிடித்துப் பழகியர்!
கல்லையும் கூழ்போல் கரைத்துக் குடிப்பவர்!
ஆற்றையும் வளைத்தணை கட்டிப் பாய்ச்சியோர்!
அண்ட வெளிக்கதிர் மண்டிலம் அளந்தவர்!
கூற்றையும் எதிர்த்தவர்! கொள்கை வளர்த்தவர்!
கூர்தல் அறத்தையும் உயிரையும் உணர்ந்தவர்!
ஏற்றமென் சொல்லுவேன்? - இவர்கள் தமிழர்கள்!
என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/229&oldid=1437429" இலிருந்து மீள்விக்கப்பட்டது