பக்கம்:கனிச்சாறு 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  195


127

ஓச்சுங்கள் தோழரே கைகளை வானில்!


ஓச்சுங்கள் தோழரே! கைகளை வானில்!
உரக்கவே கூவுங்கள் ‘தமிழ்வாழ்க’ என்று!
மூச்சுங்கள் தொளையினுள் நின்றிடும் முன்னர்
முதுதமிழ் இனம்வாழ உழைங்கள், நன்று!
ஆச்சிந்த நூற்றாண்டுக் குள்ளே நம் தமிழர்
அடைந்திட வேண்டுமே தமிழ்நாட்டுக் குரிமை!
பேச்சென்ன? எழுத்தென்ன? செயலுக்கு வருவீர்!
பின்வீழப் போகின்ற உடல், உயிர் தருவீர்!

கூடுங்கள் தோழரே! அணிஅணி யாக!
குரலெடுத் துரையுங்கள்; முழக்குங்கள்; உரிமை!
பாடுங்கள் விடுதலைப் பண், இசை யோடு!
பரப்புங்கள் கருத்துகள், உணர்வுகள், எங்கும்!
மூடுங்கள் வல்லாண்மைக் கதவினை இழுத்து!
முதுகெலும்பை நொறுக்குங்கள் அதிகாரம் சாக!
தேடுங்கள் வஞ்சரைப் பகைவரைத் தேடித்
தீக்குள்ளே வீசுங்கள் ஆள்வோர்கள் நடுங்க!

மென்முறை பண்பாட்டு மேன்முறை யெல்லாம்
மிகுந்தேறுங் கொடுமைக்குப்பொருந்தாவாம் இன்று!
வன்முறை ஒன்றாலே முதலாண்மைக் கேடர்
வணங்கிடும் நிலையுண்டு முட்புதர் போல!
பன்முறை உரைசொன்னோம்; பாடினோம்; ஏட்டில்
பலவாறாய் எழுதினோம்; பயனேதும் இல்லை!
மின்முறை அதிர்ச்சிசெய் மருத்துவம் போல
மேலேறித் தின்பாரைக் கீழிறக்க வேண்டும்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/231&oldid=1437431" இலிருந்து மீள்விக்கப்பட்டது