பக்கம்:கனிச்சாறு 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  223


152

நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்;
நெஞ்சு புண்ணாகின்றேன்!


உய்வடைந்து தமிழ்மொழியும்
தமிழினமும் நாடும்
உயரட்டும் உய்யட்டும்
என்றே என் உணர்வாய்ப்
பொய்யறியாப் பெருங்கருத்தாய்ப்
புரையில்லாச் செயலாய்ப்
பொழுதெல்லாம் நாளெல்லாம்
மாதம் ஆண் டெல்லாம்
தொய்வறியா உடம்போடும்
உயிரோடும், மக்கள்
தொளைச்செவியில் உள் நுழைத்துத்
துளிர்விடும்நாள் பார்த்தேன்!
செய்வறியா உணர்வினராய்ச்
செயலில்லா தவராய்ச்
சேர்ப்பதிலும் தின்பதிலும்
உயிர்தேய்கின் றாரே!

ஈங்கிவர்தாம் இப்படியென்
றால், இந்த நாட்டில்
இருக்கின்ற தலைவரெல்லாம்
அறிவாளர் எல்லாம்
வீங்குகின்ற நெஞ்சினராய்ப்
பேச்சினராய், மக்கள்
விளங்காமல் போகட்டும்
வீழட்டும் என்றே
தூங்கவைத்துத் தொடையினிலே
கயிறுதிரிக் கின்றார்!
தொன் தமிழர் நலிகின்றார்;
மெலிகின்றார்! அந்தோ!
நீங்கவைத்தித் துன்பத்தை -
நிலைக்கவைக்க இனத்தை -
நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்;
நெஞ்சுபுண்ணா கின்றேன்!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/259&oldid=1437469" இலிருந்து மீள்விக்கப்பட்டது