பக்கம்:கனிச்சாறு 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5



3  பாவலர்களுக்கு!

பாப்புனைய வல்லார் இக் கருத்துத் தம்மைப்
பதித்திடுக தம்மனத்தில்; கொத்து மாங்காய்த்
தோப்பினிலே காத்திருக்கத் தோகை வந்து
தோள் தழுவும் பாட்டாலும், குரங்கு வந்தே
ஆப்பதனில் மாட்டுகின்ற பாட லாலும்
ஆரிங்குப் பயனடைவார்; தமிழின் நாட்டைக்
காப்பதற்கும், ஏழைமக்கள் சிந்து கின்ற
கண்ணீரைப் போக்கவுநற் பாடல் வேண்டும்!

நங்கையரின் மேன்மையெலாம் நவின்றான் கம்பன்;
நாம் வேண்டாப் பாரதத்தைப் புகன்றான் வில்லி;
வெங்கொடுமைப் போர்பற்றிச் சயங் கொண்டானை
விளித்து விட்டோம்; நஞ்சையுண்டு பிறையைக் கொண்ட
கங்கைமுடி யானுடைய புரட்டுக் கண்டோம்;
காணாத உலகத்தைப் புளுகு நூலில்,
இங்கு கண்டோம்; இவையெல்லாம் நமக்கு வேண்டாம்;
இந்நாட்டை மீட்பதற்கே பாடல் வேண்டும்!

செந்தமிழைக் காப்பதற்குப் பாவல் லார்கள்
சேர்ந்தவராய் உயிர்ப்பாக்கள் இயற்றல் வேண்டும்!
'இந்திவரக் கூடாது; வந்தால் நம்மின்
ஏறுமொழி தாழ்ச்சியுறும்' வகையைப் பாடி
விந்தமுதற் கன்னிவரை பரப்பல் வேண்டும்;
விளைவு நம்மின் வெற்றியதா யிருத்தல் வேண்டும்.
இந்தவகை, பாடுதலே பாவல் லார்க்கிங்
கினியதெனத் தெளிந்துமனங் கொள்ளல் வேண்டும்!

கண்ணிடுக்கி, உடல்வளைந்து கன்னந் தாழ்ந்து,
கடுக்கும் வயிற் றுடனிருக்கும் பஞ்சைப் பெண்கள்,
புண்ணிடுப்பில் அமர்ந்தபடி தோலைச் சப்பும்,
புழுக்களது காட்சியுமக் குடும்பம் வாழும்
விண்ணுடுக்கள் சிரித்திடுமோர் குடிலும், இந்த
வெம்பசிக்குப் புறம்பாகித் தங்க மேனிப்
பெண்ணிடுப்பில் வாழுகின்ற குழந்தை தங்கள்
பெற்றிகளும் நம் பாவிற் காணல் வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/41&oldid=1523573" இலிருந்து மீள்விக்கப்பட்டது