பக்கம்:கனிச்சாறு 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  19


13  தமிழர் எழுச்சிப் பத்து!

முன்னம் பிறந்து சொன் முதிர்ந்து,
மூத்தோர் யாத்த முத்துறைக்கும்
முதலா யிருந்து, முக்கழகம்
முரலா நின்ற முத்தமிழைத்,
தென்னங் குரவர் முடியேற்றித்
திசையெல் லாம்போய் இசைத்தவுரை,
திளைத்தோர் விரும்பித் தீந்தமிழின்
தேறல் மாந்த விரைந்திங்குப்
பின்னம் பயின்றே உளமுவந்து
பேரும் ஊருந் தாமாகிப்
பிழைப்போ டுழைப்பும் நல்கியதன்
பெருஞ்சீர் மடுத்தும் விழியாமே,
இன்னந் துயிலிற் கிடக்கின்றாய்!
எழுவாய் தமிழா! எழுகவே!
இளமை முதுமை எண்ணாமல்
இன்றே எழுக! எழுகவே! -1

மண்ணும் அரசும் பிறர்க்கீந்து
மணித்தேர் நிறுத்தி வழிநடந்தான்!
மடவோன் ஒருவன் அணிபோர்வை
மயிலுக் கீந்தான் எனுஞ்செயலை,
எண்ணும் போதில் உடல் சிலிர்க்கும்
இருதோள் விம்மும்! கைபுடைக்கும்!
இவையுன் பெருமை! இளந்தமிழா!
இன்றுன் நிலைமை நினைக்கரிதால்!
உண்ணும் பொருட்கும் கையேந்தி,
உடுக்கும் உடைக்கும் உடல்குனிந்தே,
உறையுள் கெட்டும் வழிகெட்டும்,
உடைமை முற்றும் ஒருங்கிழந்தும்,
கண்ணுங் காதும் பொத்தியிரு
கையுங் காலும் நுடங்கினையால்!
களைவாய் தமிழா நெடுந்துயிலும்;
கனன்றே எழுக, எழுகவே! -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/55&oldid=1424652" இலிருந்து மீள்விக்கப்பட்டது