பக்கம்:கனிச்சாறு 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

கொடுக்குங் கையால் இரந்துண்பாய்!
குலையா நெஞ்சில் இருள்கொண்டாய்!
குமரித் துறையின் கரைநின்று
குரலை உயர்த்திப் பெரு வாளை
எடுக்குந் தோள் நின் இரு தோள்கள்!
எதிர்க்கும் மார்புன் மணிமார்பு!
இழந்தாய் முற்றும் இன்றேகாண்
இனமும் மொழியும் நீமறந்தாய்!
படுக்கும் பாயும் நினதில்லை!
பயிலும் மொழியும் நினதில்லை;
பணிவார்க் கின்று நீ பணிந்தாய்!
பழஞ்சீர் முற்றுங் கனவென்றாய்!
நடுக்குங் குளிரில் துணியின்றி
நனைக்கும் பனியில் துயில்கின்றாய்!
நடவாய் எழுந்தே தமிழா!இந்
நாளே எழுக, எழுகவே! -3

ஆர்க்கும் வல்வாய் வழக்கெங்கே?
அரசாள் முரசின் முழக்கெங்கே?
அயலார் எதிர்ப்பின் கனன்றெழுந்தே
அவரே இரப்பின் மடிநிறைய
வார்க்கும் கைநின் இரு கைகள்!
வாங்கல் உண்டே, பிறர்தலைகள்!
வளமும் குன்றித் திறங்குன்றி
வறியோன் எனவே வாழ்கின்றாய்!
சேர்க்கும் பொருளும் நினதில்லை!
செலுத்தும் திறையும் நினதில்லை!
சிண்டைப் பிறர்கைத் தந்தாய்நீ;
சிறுகைத் தாளத் திணைந்தாய்நீ!
போர்க்கும் போர்வை இழுத்திழுத்தே
புரள்வாய் எழுக எழுகவே!
பொன்னிப் புனலில் உடல்குளிக்கப்
போவாய் எழுக, எழுகவே! -4

அயில்வாய் மதிலும், பெருங்கோயில்
அளையும், வாழுங் கலைமுற்றும்
அயலார் கண்டே வியப்பெய்த
அமைத்தாய் உன்றன் திறமெங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/56&oldid=1424653" இலிருந்து மீள்விக்கப்பட்டது