பக்கம்:கனிச்சாறு 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  29


20  இற்றைத் தமிழக நிலை!

இற்றைநாள் தமிழகத் திழிநிலை நினைக்கின்
எரியெனக் கனன்றிடும் நெஞ்சம்;
அற்றைநாள் நினைந்தே அனல்மெழு காகும்;
'ஐயகோ' 'ஓ' வெனக் கரையும்;
பற்றறத் துறந்து விலங்குவாழ் காடே
பதியென நண்ணினும் நண்ணும்!
குற்றுயிர் உடலிற் குடிபெயர்ந் தோடும்!
கொடுநிலை கூறவும் படுமோ? 1

ஆறலை கள்வர் அரசென அமர்ந்தார்;
அறிவிலார் அமைச்சென வுயர்ந்தார்.
வீறிலா நெஞ்சினர் குடிநலங் காக்கும்
வியப்புறு படைஞரா நின்றார்;
கூறுகூ றாக மக்களைப் பகுத்தார்;
கோடியாய்க் குலங்களை வகுத்தார்;
சோறிலா மிகப்பலர் மாண்டிடச், சிலரோ
சூட்டுணா முப்பொழு துண்பார்! 2

வலையுறு மீன்போல் வாய்ந்ததோ ரியக்கம்
வாழவெனுஞ் சிறப்படைந் ததுவே!
குலைவுறு முளத்தார் இருவருங் கூடிக்
குடும்பமென் றமைந்துகொள் வாரே!
மலைவுறு தோற்றத் துயர்விலா வுயிரை
மக்களென் றீன்றெடுத் துவப்பார்!
அலைவுறு நோக்கின் விலைமகள் முயக்கம்
அன்பெனத் திகழ்ந்துயர்ந் ததுவே! 3

இழிதகைக் கூளங் குப்பைகள் எழுந்தே
இலக்கிய மெனவுலா வருமே!
மொழிவுயர் வறியா மூடர்க ளெல்லாம்
மூதறி வாளரென் றுயர்ந்தார்;
பழிமிகு பேதையர் புன்மொழி யெல்லாம்
பாடலா உருவெடுத் தனவே,
கழிமடம் பெருகிய பூரியர் தமிழாய்
கணக்கரென் றார்ப்பரிப் பாரே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/65&oldid=1424662" இலிருந்து மீள்விக்கப்பட்டது