பக்கம்:கனிச்சாறு 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

கட்குடி யுண்டோர் களிப்பெழக் குதித்தல்
கலையினுங் கூத்தினும் படுமே!
வெட்கமில் பெண்டிர் விதிர்விதிர்ப் புறுதல்
வியன்மிகு ஆடலென் பாரே!
ஒட்பமில் மாந்தர் உடுக்கையும் மிடுக்கும்
உயர்நா கரிகமென் றாகும்!
நுட்பமில் லாதார் புல்லுரை யெல்லாம்
நூல்வடி வெடுத்துயிர் பெறுமே! 5

இரவினில் திருடிப் பகற்பொழு தீதல்
ஈகையென் றேத்தவும் படுமே!
கரவுளம் பொய்ம்மொழி கொடுவினை யாவும்
கவின்மிகு செல்வமா விளையும்!
வரவினுஞ் செலவினுங் கொள்ளைகள் நிகழ்த்தும்
வாணிகர் எங்கணுந் திகழ்வர்!
அரவினுங் கொடியார் திருத்தமி லுரைகள்
அரசியல் கட்சிகளாமே! 6

வாய்மை யொன்றில்லாப் பொய்ம்மைக ளெல்லாம்
வழக்காய் வார், உரு வெடுத்த!
தூய்மையில் தோயாப் போலிகள் முற்றுந்
துறவியர் துவருடை பூண்ட;
தாய்மையிங் கில்லை! பெண்மையிங் கில்லை!
தனித்திறல் ஆண்மையிங் கில்லை!
பேய்மைகள் யாவும் மக்களென் பெயராற்
பிறந்தவண் திரிவன கண்டீர்! 7

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/66&oldid=1424686" இலிருந்து மீள்விக்கப்பட்டது