பக்கம்:கனிச்சாறு 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


80  இன்னும் பொறுத்திடலாமோ?

இன்னும் பொறுத்திட லாமோ? - தமிழ்
ஈழத்தில் நந்தமிழ்த் தாயினம் நாளும்
முன்னும் வெறியர்க ளாலே - அந்த
மூடராம் சிங்களக் காடைய ராலே,
மன்னும் கொடுமைகள் தாங்கி - நெஞ்சு
மாழ்கி மாழ்கி மடிந்திடும் செய்தி!
துன்னும் துடுக்கினைச் சாய்க்க - இளந்
தோன்றல்க ளே!உடன் மூண்டெழு வீரே!

மாண்டு மடிந்திட லானார் - இளம்
மங்கையர் கற்பை இழந்திட லானார்!
நீண்ட நெடுந்துயர்க் காதை - இன்னும்
நின்றிடும் என்ற நிலையில்லை அங்கே!
ஆண்ட தமிழினம் தம்பி! - இன்றைக்
காளப் படுவதில் மிகக் கொடும் போக்காம்!
ஈண்டுத் தயங்கிட லாமோ? - தமிழ்
இளைஞர் இளைஞைக ளேஎழுவீரே!

சிங்களர்க் கும்தமி ழர்க்கும் - ஒரு
சேர இணைந்திடும் போக்கினி இல்லை!
தங்கும் தமிழறம் எங்கே! - வெறி
தாக்கிடும் சிங்களர் போர்க்குணம் எங்கே!
எங்கும் பொருந்திடல் இல்லை - இனி
எந்தமி ழீழம் அமைதலே நன்றாம்!
பொங்கும் புரட்சியைக் காண்பீர்! - உயிர்
போவதும் வாழ்வதாம் விடுதலைப் போரில்!

தன்னந் தனித்தமி ழீழம் - பெறின்
தாங்குமோ என்பது வீணர்கள் பேச்சு!
சின்னஞ் சிறிதெனும் நாடு - பல
சீருடன் உரிமையில் வாழ்ந்திடும் போதில்
மின்னும் விளைவுக ளோடு - உயர்
மேன்மைத் திறமும் உழைப்பும் மிகுந்தால்
தின்னும் உரிமை வராதோ? - முதல்
தேவை, தமிழர்க்கு விடுதலை ஒன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/116&oldid=1424608" இலிருந்து மீள்விக்கப்பட்டது