பக்கம்:கனிச்சாறு 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


83  பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை !
பிறந்துவிட்ட உரிமையெண்ணம் சாவதில்லை!


பேச்சுரையால் தமிழீழம்
பிறப்ப தில்லை!
பிறந்துவிட்ட உரிமையெண்ணம்
சாவ தில்லை!
மூச்செல்லாம் விடுதலைக்கே!
முயற்சி யாவும்
முழுவுரிமை பெறுவதற்கே!
முனைந்தோர் கையின்
வீச்செல்லாம் பகைப்புலத்தை
வீழ்த்து தற்கே!
வினையெல்லாம் தமிழீழம்
சமைப்ப தற்கே!
ஏச்செல்லாம் இழிவெல்லாம்
உரமே ஆகும்!
இளைஞர்படை எழுந்துவிட்டால்
கொடுமை சாகும்!

பதவியெல்லாம், நாற்காலி
நலன்கள் எல்லாம்,
பாய்ந்துவரும் எழுச்சிக்குத்
துணையும் ஆமோ!
உதவியெல்லாம் உரிமையினை
மீட்டி டாது!
உயிர் மீட்டும் விடுதலைக்கே
உரஞ்சேர்க் காது!
பொதுவான நடைமுறைகள்
உணர்வை வீழ்த்தும்!
பொய்ச்சலுகை, தூதுரைகள்
காலந் தாழ்த்தும்!
மெதுவான போக்குகளைத்
தவிர்த்தல் வேண்டும்!
மெத்தனங்கள் சூழ்ச்சிக்குக்
கைத்தா ளங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/119&oldid=1424611" இலிருந்து மீள்விக்கப்பட்டது