பக்கம்:கனிச்சாறு 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  47

பண்டைவர லாற்றையறி! உன் உரிமைத் தீயினைப்
பற்றவைத்தே வீசிடுவாய் நல்லடிமை நாயினை!
கண்டுநிகர் தாய்மொழியால் உன்னினத்தைப் பேணுவாய்!
காலம்வரும்; வெற்றிவரும்; வாழ்க்கைநலம் காணுவாய்! (ஏறுநடை)

ஆரியர்தம் கொட்டமெலாம் அடங்கிவிடும் நாளிலே
ஆட்சிதமிழ்த் தாயின்கையில் வந்துவிடும் வாளிலே
நேரியஉன் கொள்கையினை நீமுழங்கிப் பாடடா!
நேற்றிழந்த உரிமைநலம் நாளைவரும்; கூடடா! (ஏறுநடை)

-1979


45  வெற்றிக்கொடி நாட்டு !

அருமைத் திராவிடத் தம்பி! - பல
அரசியல் கட்சிகளை நம்பி, நீ
அலைந்த அலை போதும்;
நடந்த நடை போதும்;
அமைவாய் ஒருபுறம் குந்தி, - இனி
அடுத்த முயற்சியினைச் சிந்தி!

அன்புடைத் தமிழின மறவ! - உனை
ஆண்ட தலைவர்களின் உறவால்
அடைந்த பழி போதும்;
மிடைந்த துயர் போதும்;
ஆழ நினைந்து வினை தொடங்கு, - நீ
அற்றைத் தமிழ்மறத்தின் மடங்கு!

விடுதலை விரும்பிடும் புலியே, - உனை
விடுத்தனர் தலைவர்கள் தனியே!
வேகம் தளராமல்
வெம்மை குளிராமல்
வீரநடையில் படைகூட்டு! - தமிழ்
வெற்றிக்கொடியை இங்கு நாட்டு!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/76&oldid=1424567" இலிருந்து மீள்விக்கப்பட்டது