பக்கம்:கனிச்சாறு 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  63

63 இந்தியன் என்றால் என்னது தம்பி?

சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!

மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!

குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்;
இவற்றிடை யாவரும்

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?

கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!

வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!

முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/92&oldid=1424585" இலிருந்து மீள்விக்கப்பட்டது