பக்கம்:கனிச்சாறு 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 கனிச்சாறு – நான்காம் தொகுதி


45

நம்பிக்கை


கணியன் ஒருவன் மரத்தடியில்
கற்கள், சோழி, கரும்பலகை,
துணியின் மூட்டை, மணிமாலை,
சுவடிக் கட்டு, பொத்தகங்கள்,
பணியின் விளம்பரச் சிறுபலகை,
படங்கள் ஆகிய இவற்றுடனே
அணியணி யாகத் திருநீறும்
அணிந்தே முடுக்காய் அமர்ந்திருந்தான்! 1

தெருவில் நடந்து கொண்டிருந்தேன்!
திகழும் நிழலுக் காங்கொதுங்கி,
வருவோர் போவோர் வேடிக்கை
வாய்ப்பாய் நோக்கிய வாறிருந்தேன்!
தெருவில் செல்வோர் சிற்சிலபேர்
திருட்டுகள், வழக்கு, திருமணங்கள்,
வருவாய் வாய்பென் றிவைபற்றி
வந்தே கணியம் கேட்டிருந்தார்! 2

வந்தோர்க் கெல்லாம் பாட்டாலும்
வாயுரை யாலும், கோள்நிலைகள்,
முந்திய செயல்கள், நடைவினைகள்,
முடிவில் நடக்கும் விளைவெல்லாம்
தந்திர மாக அவரவர்க்குத்
தக்க படியாய்ச் சொன்னதுடன்
மந்திரம் மாயம் எனச்சிலர்க்கும்
மறைவா யுரைத்துக் கொண்டிருந்தான் 3

அரைமணி நேரம் சென்றிருக்கும்!
அடுத்தே நகர்ந்திட நினைத்திருந்தேன்.
விரைவாய் ஒருவன் மிதிவண்டி
மேலிருந் திறங்கி அதைநிறுத்தி,
உரைமுடி யாமல் கேட்டிருந்த
ஓரிரு பேரைத் தாம்விலக்கி,
இரைந்தே கணியனைக் கண்டபடி
ஏறாய் மாறாய் பேசிநின்றான்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/101&oldid=1440730" இலிருந்து மீள்விக்கப்பட்டது