பக்கம்:கனிச்சாறு 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 கனிச்சாறு – நான்காம் தொகுதி


எதிரினில் இருந்த ‘சைவர்’
இடுப்பினைக் குத்திக் கொண்டே,
“கதிர்அறு வடைக்குப் பின்னர்,
‘கட்டாயம் பழனி வந்து,
சதுரக்கா வடியெ டுப்பேன்’
என்றுநான் வேண்டிக் கொண்டேன்
குதிரவே இல்லை நேரம்;
குடும்பத்தில் தொல்லை” என்றார். 3

நெருப்பவி யாத வண்ணம்
நீள்சுருட் டிழுத்த வாறே,
“திருப்பதி பார்த்துள் ளீரா?”
எனக்கேட்டார் திருமால் அன்பர்!
“திருப்பதி என்ன, ஐயா?
பழனியைச் சென்று பாரும்;
இருப்புப்பா தைமேல் வண்டி
இழுப்பதை...!” என்றார் ‘சைவர்’! 4

செருப்பினில் நரகல் பட்ட
எரிச்சலால் முணகிக் கொண்டே
“விருப்பந்தான்; நேரமில்லை;
விடியுதா?” என்றே அந்தத்
திருப்பதி யன்பர் சொல்லித்
திரும்பினார், ‘சைவர்’ பக்கம்!
நெருப்பினில் விழுந்தாற் போல
நெஞ்செல்லாம் எரிந்தார் அங்கே! 5

‘சைவர்’ தம் முன்னால் உள்ள
துளசியின் தழையைக் கொஞ்சம்
கைகளால் உருவித் தம்கால்
கழிவினைத் துடைக்கக் கண்டார்!
மெய்யெலாம் பதறி நிற்க,
மிடறு,வாய் துடிது டிக்க
“வெய்யெரி வாயில் வீழ்வீர்;
மீளவும் மாட்டீர்” என்றார் 6

........................................
                    (முடிவுறாப்பாடல்)

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/105&oldid=1440734" இலிருந்து மீள்விக்கப்பட்டது