பக்கம்:கனிச்சாறு 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101


70

தம்பி, உனக்கொன்று சொல்வேன் !


தம்பி, உனக்கொன்று சொல்வேன்!-இந்தத்
தமையனின் மொழி கேட்பாய்;
தமிழ் கற்க வேண்டும்!-எழும்
செம்புது வெள்ளம்,உன் உள்ளம்!-அது
சீறிடில் குழி,மேட்டைச்
சீர்செய்யத் தூண்டும்! -(தம்பி)

நம்மொழி, இனம்,நாடு தம்பி-ஒரு
நாளினில் விளங்கின,
நானிலம் போற்ற!-அட,
வெம்மொழி ஒன்று புகுந்தே-அதன்
வீறு குறைத்தது;
விழுந்ததவ் வேற்றம்! -(தம்பி)

பாரடா, இன்று,நீ தாழ்ந்தாய்!-இந்தப்
பாரினில் உள்ள
மொழிக்குலம் யாவும்-தமிழ்
வேரினில் தோன்றின வன்றோ!-அது
வீழ்ந்து கிடப்பதும்
இழிவதும் நன்றோ? -(தம்பி)

நம்புது முயற்சிகள் யாவும்-மீண்டும்
நற்றமிழ்க் கொற்றத்தை
நாட்டிடல் ஆகும்-தமிழ்த்
தம்பி, அதற்குன்னைப் போலத்-தம்மைத்
தருதற்கா யிரம்பேர்கள்
வேண்டும்இந் நாளே! -(தம்பி)

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/136&oldid=1440802" இலிருந்து மீள்விக்கப்பட்டது