பக்கம்:கனிச்சாறு 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 129


குவிந்தனர் மதந்தனைக் காட்டி!
கோடையில், மழையில், பனியினில் மூழ்கிக்,
கொடுங்கடல் புகுத்துயிர் வாடி - தங்
குடலிட உணவதைத் தேடி - பலர்
வாடையில், ஒருசிலர் கடவுளை, மதத்தை
வளர்த்ததில் தங்குடல் கழுவி - பல
வகையினில் இன்பத்தைத் தழுவி - பட்
டாடையில் போர்த்த அணியுடல் மறைத்தே
அறுசுவை உணவினை உண்டு - பல,
அணங்குகள் தம்நலம் கண்டு - மத
ஓடையில் நீந்தி உலகினில் வாழ்வார்
உழைத்திடும் மக்களை ஏய்ப்பார் - அவர்
உளத்தினை நாள்தொறும் மாய்ப்பார்!

உழைப்போர்க் கெல்லாம் ஒவ்வொரு மடமும்.
ஒவ்வொரு பீடமும் தந்து - பல
உணவதும், உடைகளும் தந்து - அவர்
அழைப்பார் ஆகில் அனைவரும் அவர்போல்
ஆயிரம் பூக்களைக் கொய்து - நாளும்
அறுமுறை பூசைகள் செய்து - நன்கு
பிழைப்பா ரன்றோ? பெரும்பேரின்பப்
பிறவுல கெய்துவ ரன்றோ? - இப்
பிறப்பினை அறுப்பா ரன்றோ? - இதை
உழைப்போ ரெல்லாம் உணருவ ராகில்
உயிர்பெறுமா மதம் இங்கு? - இதற்
குழைப்பது அவரவர் பங்கு!

-1957
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/164&oldid=1444196" இலிருந்து மீள்விக்கப்பட்டது