பக்கம்:கனிச்சாறு 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௧


56. வலிமையான வாழ்வியல் கருத்துக் கூறுகளை இளைய தலைமுறையினர்க்கு மிக எளிமையாய் எடுத்துரைக்கிறார் பாவலரேறு.

57. மாந்தப்பற்றில்லா ஆளுமையர்க்கான அறிவின் பெருக்கால் வாழ்வின் போலிமைத் தனங்கள் எவ்வாறு பெருகி விடுகின்றன என்று விளக்குகிறது இப்பாடல்.

58. உழைப்பவரே பெரியோர். உழைக்காதவர் சிறியோர் என்று உழைப்பை - உழைப்பின் சிறப்பை விளக்குகிறார் பாவலரேறு.

59. வினை செய்தலே உயர்வு - அவ் உயர்வைப் பின்பற்றவும், தாழ்வு உணர்வை அகற்றவும் தம்பிக்கு உணர்த்துகிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

60. வாழ்வின் நல்லுணர்வுகள் ஒவ்வொன்றையும் நாம் ஏற்கையில் அது எவ்வாறு இன்னொரு தன்மையினதாய் இருந்திடக் கூடாது - என்பதை விளக்குகிறது இப்பாடல்.

51. அறிவினைத்தூண்டிடும் தூய்மை வாழ்வின் கால்களே நூல்கள் தாம் என்றும், அவற்றைக் கொண்ட நூலகம் ஒவ்வொரு வீட்டிலும் தேவை என்பதையும் விளக்குகிறது இப்பாடல்.

62. தமிழினத்தைக் காப்பதாகக் கயமையாக நடக்கும் தலைவர்களின் போக்குகளைக் கண்டு ஏமாறிப் போய்விட வேண்டாம் என இளைஞர்களை எச்சரிக்கிறார் பாவலரேறு.

63. இயற்கையான இவ் உலகப் போக்கு இன்றைக்கு எவ்வாறு செயற்கையாகவும், சூழ்ச்சியாகவும் போய்விட்டது என்று கூறி விளக்குகிறது இப்பாடல்.

64. விலங்குகள்போல் உண்பது உறங்குவது என்றில்லாமல் நல்லுயர் கல்வியொடும், நன்னெறி வாழ்வொடும் பொதுவுணர் வாழ்க்கையாக நாம் வாழும் வாழ்க்கையே பொய்யா அறவாழ்க்கை என்கிறார் பாவலரேறு.

65. பகட்டாலும் கவர்ச்சியாலும் மயங்காமல், நல்லறிவைப் போற்றிக்காத்து வளர்த்தல் வேண்டும் அதுவே நன்மைதரும் என்று அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

66. “வேட்டை நாய்களாய்த் தம் நலங் காப்போரை மறுத்து, கேட்டுக்கு முன்நிற்க வேண்டுமெனில் தம்பி - நீ ஏட்டுக்குள் புதைந்திடாமல் மூட்டுக்கு வலிவு செய்” -என்று இளைஞரை அழைக்கிறார் பாவலரேறு.

67. நன்னிலை உணர்வுகள் நசிகையில், நலிவைக் கண்டு அஞ்சாமலும் எதுவரினும் கொடுமையை எதிர்க்கத் தயங்காமலும் இருக்க அறிவுறுத்துகிறது இப்பாடல்.

68. எண்ணியவற்றுள் எழுதவும், எழுதியவற்றுள் பரப்பவும், பரப்பியவற்றுள் தேரவும், தேர்ந்தவற்றுள் செயல்படவும் வினைபடவும் செய்கையில் எதிர்ப்புக்குத் தயங்காதே என்கிறார் பாவலரேறு.

69. குன்றென அறிவு சேர்த்தாலும் - உடல்நலம் கெட்டால் அனைத்தும் முடமாகிப் போகுமே என்று வருந்தி உடல் நலம் பேண அறிவுறுத்துகிறது இப்பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/22&oldid=1444665" இலிருந்து மீள்விக்கப்பட்டது