பக்கம்:கனிச்சாறு 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  187


நோயினால் உடல்கெடும்;
நூலிலா(து) அறி(வு) அழிம்!
வாயினால் உளம்கெடும்!
வாழ்க்கையே அவைதாம்!
ஏயுநல் இன்பமும்
எதிர்வரும் பொருளும்
ஆயுநல் அறமும்
அவையெனப் போற்றுவோம்!

-1987


128

ஊர் மக்கள் நலன் கருது !


ஊர்மக்கள் நலன் கருதி
உண்மைக்குத் துணை நின்று,
நேர்மைக்குக் குரல்கொடுப்பாய், தம்பி -பொது
நிகழ்ச்சிக்குத் தோள்தருவாய், தம்பி!

எந்தவொரு தீச்செயலும்
எவர்செய்த போதினிலும்
முந்திநின்று நீ, கடிவாய், தம்பி! -மக்கள்
முன்னேற்றம் கருதிடுவாய், தம்பி!

எதுநடந்த நிலையினிலும்
எனக்கென்ன என்றிராமல்,
அதன்நன்மை, தீமையினை நன்றாய் -நீ
ஆய்ந்தறிந்து கூறிடுவாய், தம்பி!

அரசினரே செய்திடினும்,
அதிகாரி உதவிடினும்,
தரமிலதைத் தவறுகளைத் தம்பி - நீ
தட்டிக்கேட்கப் பழகிடுவாய்த் தம்பி!

பொதுநன்மைக் குழைக்கையிலே
புதுக்கருத்தை உரைக்கையிலே,
புதிய இடர், துன்பம் வந்தால், தம்பி -அவை
புன்மையென ஒதுக்கிடுவாய், தம்பி.

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/222&oldid=1444537" இலிருந்து மீள்விக்கப்பட்டது