பக்கம்:கனிச்சாறு 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188  கனிச்சாறு – நான்காம் தொகுதி


129

கண்ணீர் வாழ்வில்
கரையும் குழந்தைகள் !


பெண்ணாய்ப் பிறந்தால்,
குழந்தை முதலே,
பெருஞ்சுமை தாங்கிட வேண்டுமோ?
புண்ணாய் உடம்பும்
உள்ளமும் புழுங்கப்
புழுவாய் நெளிந்திடல் ஞாயமோ?
மண்ணாய்ப் போகும்
பிறவியுள் பெண்ணே
மற்றவர்க் கென்றே வாழ்பவள்!
கண்ணாய்க் கருத்தாய்க்
காப்பதற் கென்றே
காதலில் தாய்மையில் ஆழ்பவள்!

பெண்ணிலும் ஏழைப்
பிறவியாய்ப் பிறந்தால்
பிறந்தது முதலே துன்பந்தான்!
எண்ணிலாப் பெண்கள்
இந்திய நாட்டில்
ஏழையர் எனவே துயரந்தான்!
கண்ணீர் வாழ்வில்
கரைந்து போவதே
கணக்கிலாக் குழந்தைகள் வாழ்வாகும்!
உண்ணீர் இன்றி
உடுக்கையும் இன்றி
உழல்கிறார்! அதுமிகத் தாழ்வாகும்!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/223&oldid=1444538" இலிருந்து மீள்விக்கப்பட்டது