பக்கம்:கனிச்சாறு 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௩


82. உறுப்புக் குறைந்த இரவலன் ஒருவன் தெருவில் உருண்டு கிடப்பதைக் கண்டுங் காணாமலுஞ் சென்ற மாந்தர் கூட்டத்தை எள்ளிப் பாடியது. பாவலர் கண்ணதாசனின் ‘முல்லை’யில் வெளியிடப் பெற்றது.

83. மக்கள் மனச்சீர்மை பெற்றாலொழிய அறிவியல் முன்னேற்றங்களால் பயனில்லை என்ற கருத்தை உணர்த்துவது.

84. மதத்தலைவர்களின் போலி வாழ்க்கையை இகழ்ந்தது. ‘வானம்பாடி’ யில் வெளிவந்தது.

85. அன்பர் ஒருவருக்கு மருத்துவமனையில் பிறந்த குழந்தைப் பிறப்பைப் பதிந்து கொள்வதற்காகச் சாதிவிளக்கம் கேட்கப்பட்டதைக் கண்டு உள்ளம் நொந்து எழுதியது. பாவேந்தரின் ‘குயிலில்’ வெளிவந்தது.

86. பாவலரேறு தாம் பயின்ற சேலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆண்டு மலருக்காக எழுதி விடுத்தபாடல்.

87. எவர் தாலாட்டுப் பாடினாலும் பெரும்பாலும் குழந்தையின் குடும்பநிலையை உயர்த்திப் பாடுவதையே வழக்கமாகப் பார்க்கிறோம். இப்பாடல் குழந்தையின் ஏழ்மைக் குடும்பநிலையை உண்மையாகச் சுட்டுகிறது. தம்மைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளாமல் சாதிப் பெயரைக் கூறிப் பெருமைப்படுகின்றவர்களை இழித்து எழுதியது.

89. மக்களின் ஒரு பகுதியினரைத் தாழ்த்தி மதப் பெருமை கூறுவோரைக் கடிந்தது.

90. ஆசிரியர் பொதுமை வாழ்வில் பட்ட துயரங்களையும் தொல்லைகளையும் ஏமாற்றங்களையும், எதிர்ந்த போலி மாந்தர்களையும், போலியுணர்வுகளையும் நினைந்து தம் நெஞ்சு அழன்று எழுதியது. ‘சனநாயகம்’ என்னுமிதழில் வந்தது.

91. ஏழைகளுக்காகவும், உழைப்பாளர்களுக்காகவும் உழைப்பதாக எல்லா அரசியல் கட்சியாளர்களும் சொல்கிறார்கள்? ஆனால் உண்மையாக அவர்களுக்கு உதவுபவர்கள் யார் இருக்கிறார்கள்! அதுவன்றி அவர்களிடமிருந்து நலம் பெறவே விரும்புகிறார்கள்.

92. பணம் தேங்கியிருக்கின்ற இடத்திலிருந்து பறிமுதல் செய்தால் என்ன? ஏழைகள் எல்லாருக்கும் பங்கிடலாமன்றோ ? அது பற்றிய ஏக்கம் இப்பாட்டில் தெரிகிறது.

93. பழைய தொன்மக் குப்பைகளையும் பொய்ம்மைக் கதைகளையும் தவிர்த்து இளைஞர்களை மக்கள் நலங்காக்கும் புதுமையிலக்கியம் செய்ய விடுக்கும் அழைப்பு.

94. போலிச் சீர்திருத்தக்காரர்கள், பொய்ம்மை மதத் தலைவர்கள், ஆகியோரைக் கண்டு நொந்து பாடியது.

95. அழுக்கு உடையில், நாற்றமெடுத்த உடலொடு அலையும் ஒருவனும் மாந்தனே என மாந்தநேய உணர்வூட்டும் பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/24&oldid=1444668" இலிருந்து மீள்விக்கப்பட்டது