பக்கம்:கனிச்சாறு 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 9


6

வேண்டாத இந்தி !


ஏன் தம்பி நீ அழுகின்றாய் - நின்று
ஏன் தம்பி நீ அழுகின்றாய்?

வான்விழும் நீர்போல வழிகின்ற கண்ணீரை
வளருமுன் பூங்கையால் துடைத்துத் துடைத்தபடி (ஏன்)

“தேன்தமிழ் மணக்கின்ற வாயில் - நாத்
திரும்பாத ‘இந்தி’எனும் நச்சுப் பாம்பைக்
கூன்கொள்கை யாளர் விட்டாரே” - என்று
குறைகூறிக் குறைகூறி ஓலமிட் டலைபோல (ஏன்)

பொங்கிவரும் ஆற்று நீரைக் - கரை
போட்டுத் தடுத்து நிறுத்துதல் போல,
தங்கிவரும் இந்தித் தீமேல் - மண்ணைத்
தூவி யழிக்காமல் தேம்பித் தேம்பி இன்னும் (ஏன்)

சோற்றினில் நச்சைக் கலப்பார் மொழி
சோர்ந்திடப் பிறிதொரு மொழியினைச் சேர்ப்பார்,
காற்றினில் நச்சைக் கலப்பார் - யாவும்
கயவர்கள் செயல்களாம்; நீயிதை மாய்க்காமல் (ஏன்)

நெஞ்சினை இரும்பாக ஆக்கு; - கூர்
நெடுவேலை உன்பெருந் தோளினில் தூக்கு!
வெஞ்சினம் கொண்டுநீ தாக்கு! - அந்த
வேண்டாத இந்திக்குக் காட்டு வடநோக்கு! (ஏன்)

-1957
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/44&oldid=1440460" இலிருந்து மீள்விக்கப்பட்டது