பக்கம்:கனிச்சாறு 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 19


13

ஓ ! மாணவச் செல்வரே !


ஓ !
மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே!
ஊணும் உறக்கமும் உயிர்ப்பும் தமிழ்க்கென
நாளும் எண்ணி எண்ணி நலிகையில்
நீளப் படர்ந்தஎன் நினைவுத் திரையினில்
முன்னுறத் தோன்றி, முகிழ்த்தபுன் னகையோடு
தோளும் உணர்வும் தூக்கித் துவளுறா
ஆண்மை தெறிக்க ஆர்க்கும் குரலினால்
“நாளைத் தமிழகம் நம்முடைத் தமிழகம்”
என்றுரை சாற்றிடும் இளைத்திடா உணர்வுசேர் 10
மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே!

இருள்நிறைந் திருக்கும் இற்றைத் தமிழகம்
அருள்நிறைந் திலங்கிய அன்றைய நிலம்போல்
ஒளிபெற விளங்கிட விரும்பும் உணர்வினால்
ஆயிரம் கோடிப் பணிகள் ஆற்றிடப்
பாயிரம் எழுதிப் படைத்திடு வோரே!
பொங்கும் உணர்வொடும் பூரித்த அன்பொடும்
உங்களுக் காக ஒன்றிரண் டுரைப்பேன்!

நீட்டிய செவிகளில் நிறுத்துக இவ்வுரை!
பூட்டிய நெஞ்சினிப் புலர்ந்தது காண்! 20
அயர்வுற்ற தோளினி உயர்வுற்ற தென்க!
மயர்விலா அறிவும் மனமும் திறக்க!
எங்கணும் நல்லுணர் வேற்றம் பெறுக!
தங்கிய இருளெலாம் தகர்க்கப் படுக!

கற்ற கல்வியும் ஒழுங்கும் கால்கொள
நற்றவப் பயனால் நாட்டாண்மை செய்க!
தோளாண்மை பூண்டு குமுகாயத் தொண்டெனும்
வேளாண்மை செய்திட விரைந்திவண் வருக!
எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! 30
எத்தனை எத்தனை இழிசேர் குப்பைகள்!
செத்துக் கொண்டுள தமிழகச் சீர்மைகள்!
புத்துருக் கொண்(டு) அவை புதுக்கிடப் புகுக!
செந்தமிழ்ப் படையினை வடபடை வென்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/54&oldid=1440477" இலிருந்து மீள்விக்கப்பட்டது