பக்கம்:கனிச்சாறு 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 கனிச்சாறு - நான்காம் தொகுதி


இந்த நொடியினில் ஏற்றம் பெறாதினி
எந்தக் காலத்து எழுவதோ? ஓர்மின்!
தமிழுக் குற்றது தமக்குற்ற தென்னும்
இமிழாக் கொள்கை எழுந்ததிங் கென்றால்,
அடிமை விலங்குகள் அறுக்கப் படாவா?
விடியாத் தமிழ்நிலம் விடிவுற் றெழாதா?
மடியினும் துயிலினும் மாண்டுகொண் டுள்ள 40
துடியாத் தமிழர்க்கு உணர்வுதோன் றாதா?

வானுற நின்று தோள்களை உயர்த்தி
வீணாம் நினைவுகள் விட்டு விலகி
உலகினைக் காண்பின்! மாணவர் உலகமே!
பலகலைக் கல்வி, பலதொழில், அறிவியல்,-
கலகல வெனப்பிறர் கற்பன காண்மின்!
தமிழகம் நாட்குநாள் தாழ்கின்ற தில்லையா?
உமிழத் தகும்படி உயர்வற் றோம்! காண்!
எழுதல் இயலுமா? எழுந்(து)அவர் போலும்
விழாமல் நடந்து வெற்றி பெறுவமா? 50
எண்ணத் தோன்றிட வில்லையா உமக்கே!
எண்ணி எண்ணி இளைப்புற வில்லையா?

இத்தகு நிலையில் என்செய் கின்றோம்!
மெத்தப் பழம்புகழ் மிகைபடப் பேசிக்
கத்தலும் அரற்றலும் கனைத்தலும் அல்லால்
இத்தரை நம்மால் எள்ளள வேனும்
விளைவுற்ற தென்றே விள்ள முடியுமா?
களைகளை அகற்றிடக் கருதி னோமா?

மாணவர் உலகமே! மதிதகு உலகமே!
பூணுக உறுதி! பூணுக எழுச்சி! 60
ஆட்டமும் கூத்தும் அறவே நீக்குக!
ஓட்டமும் நடையுமா ஓய்வற் றிலங்குக!
ஆரவா ரங்கள் அடிச்சிதைத் திடுக!
தீர நினைக்க! நினைத்துத் தேறுக!
போலித் தனங்களால், பொய்ம்மை நினைவினால்
வாலைப் பருவமும் வரட்சி யுறுவதோ?
உடுக்கையும் உண்கையும் ஊருலா வருகையும்
மிடுக்கையும் புனைவையும் மேனி மினுக்கையும்
கொண்டதே மாணவர் உலகெனக் கொடியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/55&oldid=1440478" இலிருந்து மீள்விக்கப்பட்டது