பக்கம்:கனிச்சாறு 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


சிற்றுடல் சிட்டு, நல்ல
சுறுசுறுப் போடு வாழும்!
சுற்றிலும் வலிய புட்கள்
சூழ்ந்திட அஞ்சி வாழும்!
கற்றறி வறிந்த தில்லை!
என்னினும் கற்றார் போல,
ஒற்றுமை, முயற்சி, வாழ்க்கை,
ஒழுங்கெலாம் அதன்பால் உண்டே!

-1967


88  புகை வண்டி!

இரும்பு வண்டி ஒன்று வந்தே
எட்டுப் பெட்டியை இழுக்குதாம்!
கறுப்புப் புகையைக் கக்கிக் கொண்டு
காடும் மலையும் தாண்டுதாம்!

பச்சைக் கொடியைக் காட்ட, வண்டி
பறந்து கொண்டு செல்லுதாம்!
உச்சி கிழியக் கூவிக் கூவி
ஊரை நோக்கி ஓடுதாம்!

கையில் உள்ள சிவப்புக் கொடியைக்
கண்டால் அஞ்சி நிற்குதாம்!
மெய் குலுங்கக் கோடிப் பேரை
மேற்கும் கிழக்கும் சேர்க்குதாம்!

குன்றின் மேலே, காட்டுக் குள்ளே
குரல் கொடுத்துப் போகுதாம்!
தண்ணீர் குடித்துக், கரியைத் தின்று
தாவிக் குதித்துப் போகுதாம்!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/114&oldid=1424438" இலிருந்து மீள்விக்கப்பட்டது