பக்கம்:கனிச்சாறு 5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93


96  எச்சரிக்கையாயிரு தம்பி!


எவர் பேச்சைக் கேட்பது?
எவர் நூலைப் படிப்பது?
எச்சரிக்கை யாயிரு தம்பி! - குட்டிச்
சுவராக உனையாக்கும்
நூலுண்டு; பேச்சுண்டு;
தெளிய வேண்டும் நீ கண்டு!

கைக்குக் கிடைப்பன
எலாம்படிக் காதே!
காலத்தை வீணடிக்காதே! - தம்பி
பொய்க்கும் புரட்டுக்கும்
பளபளப் புண்டு; நீ
புரிய வேண்டும் அதைக்கண்டு!

பாலுக்கும் வெண்மை!
பழங்கள்ளும் வெண்மை!
பார்வையில் புரியாதோ உண்மை! - தம்பி
மேலுக்கு நல்லவரைப்
போன்றார் மிகவிருப்பார்!
மெச்சினால் கழுத்தையே அறுப்பார்!

இனிப்புள்ள சொற்களை
எவர்பேசி னாலும்
தனிப்புளு கென்றுநீ தள்ளு! - தம்பி
பனிக்கட்டி குளிர்ச்சியே!
பருகினால் மிகு சூடு!
பயன் என்ன என்பதையே தேடு!

நேருக்கு நேர் நின்று
சுடச்சுடச் சொல்லுஞ்சொல்
தேருக்கு அச்சாணி போல வாழ்க்கைப்
போருக்குக் கேடயமாகும்!
புகழ்ச்சிக்கு மயங்காதே!
புரிந்துகொள்! நீ தயங்காதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/127&oldid=1425733" இலிருந்து மீள்விக்கப்பட்டது