பக்கம்:கனிச்சாறு 5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95


97  அறிவுப் புரட்சி!

பள்ளியிற் குறும்பு செய்யாதே - உளப்
பான்மையை எப்போதும் குறைக்க எண்ணாதே!
பிள்ளைக ளோடொரு பிள்ளை - பின்
பிழைகள் நீ செய்வதில் நேர்மையொன் றில்லை!

தாழ்வும் உயர்வும் எண்ணாதே! - கல்வி
தரும் உயர் வொன்றைவிட் டெதையும் எண்ணாதே!
ஆழி நடுவினைப் போலக் - கற்று
அமைதிகொள்! இரையாதே கரைநீரைப் போல!

கணக்காயர் சொல்லை மதிப்பாய் - அவர்
கட்டளை கேட்(டு) அதைப்போல நடப்பாய்!
குணக்குன் றெனப்புகழ் நீசேர்! - பெருங்
குறும்பன் எனும்பெயர், கீழ்மைக்குச் சரிநேர்!

மற்றவர் பொருளை வவ்வாதே - உனை
மாளவைத் தாலும் பொய் சொல்ல ஒவ்வாதே!
கற்றவர் முன்னில் பேசாதே! - எனில்
கல்லாதார் தமைவிட்டு விலகக் கூசாதே!

'சாதி'யொன் றில்லையென் றெண்ணு - அதைச்
'சாத்திரம்’ சொன்னாலும் நம்பாதே கண்ணு!
வீதிகள் கோணைகள் ஆயின் - அங்கு
வாழ்பவர் யாவரும் மாந்தரே என்பாய்!

ஏழையர்க் கென்றும் இரங்கு - அவர்
ஏழ்மைக்குக் காரணம் செல்வர் செருக்கு!
பிழையன் றோஏற்றத் தாழ்வு - மாந்தப்
பிள்ளைகள் யாவர்க்கும் பொதுவன்றோ வாழ்வு!

உடுப்பதும் உண்பதும் கொண்டே - நல்
உயர்வென்றும் தாழ்வென்றும் கற்பித்தார் பண்டே!
கொடுப்பதல் லால்உயர் வில்லை - செல்வக்
கூறுகள் சிலருக்கே உரிமையென் றில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/129&oldid=1425735" இலிருந்து மீள்விக்கப்பட்டது