பக்கம்:கனிச்சாறு 5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ௪

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


109. எந்தச் செயலை எடுத்துக் கொண்டாலும் அதற்கென்று உழைக்காமல் பயன் இல்லை; ஆழப்படுத்தாமல் நீர் ஊறாது - என்று சிறுவர்க்கு அறிவுறுத்துகிறார் பாவலரேறு. -

110. நாயின் நன்றி உணர்ச்சியையும் கடமையையும் சொல்லி நாமும் அதுபோல் வாழ்ந்து காட்டவேண்டுமென்று தம்பி, தங்கைகளுக்குக் கூறுகிறது இப்பாடல்.

111. நாய் எவ்வாறு குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர்க்கும் நன்றியுடையதாய் இருக்கிறது என்று கூறி, அதே நாய் தன்னின நாய்களுக்குப் பகையானதாகவும் தன் குட்டிக்குத் தந்தையாகவும், குட்டிகளின் தாய் நாய்க்குக் கணவனாகவும் இருப்பதை விளக்குகிறது பாடல்.

112. பொதுமை உணர்வு கொள்ளுதல் வேண்டி சிறுவர்க்கு உணர்த்துவதாய் அமைந்த பாடல். அப்பொதுமை உணர்வோடுதான் இனநல உரிமை உணர்வு நெறியுடையது என்று சிறுவர்க்கு விளக்குகிறார் பாவலரேறு.

113. பேச்சிலோ மூச்சிலோ விளங்காதபடி உண்மையும், பொய்யும் உலவி வருகையில் ஏச்சில் மயங்காமல் எதிர்ப்பில் தயங்காமல் செயல் முடிக்குமாறு தம்பிக்கு அறிவுறுத்துகிற பாடல்.

114. விளையாட்டு, வேடிக்கையில் பொழுதை வீணாக்காமல் உள்ளத்தையும், உடலையும் பயிற்றுவித்து மனக்கலத்தை உழுதுக் கருத்தைப் பயிர்செய்யச் சொல்லுகிறார் பாவலரேறு.

115. மருத்துவர் இளங்கோ அவர்களின் ஆண் குழந்தைகள் இருவரின் விளையாட்டுப் படம் கொண்ட தமிழ்ச்சிட்டு அட்டைப்படப் பாடல். அண்ணன் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் தம்பி கேட்பது போன்றதான பாடல்.

116. தலைவாராமல் பள்ளி செல்லாமல் வருந்தும் குழந்தையைத் தந்தை தேற்றுவதான பாடல். பொன்முகிலன் - கோமதி இணையரின் குழந்தை பூவிழியின் படம் வந்த தமிழ்ச்சிட்டு அட்டைப் பாடல்.

117. எழுதுகிறபடி புகைப்படமுள்ள குழந்தைக்குத் தமிழும் அறிவியலும் வாழ்வியலும் எழுதச் சொல்கிறது இப்பாடல்.

118. மருள்கின்ற குழந்தையை, எதனைக்கண்டும் மருளவேண்டா; மயங்கவேண்டா என அறிவுறுத்தும் தமிழ்ச்சிட்டு அட்டைப்படத்திற்கான பாடல்.

119. வருத்தப்பட்டு முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கும் மூன்று குழந்தைகளின் படத்தினை அட்டைப்படமாகக் கொண்ட தமிழ்ச்சிட்டு இதழின் பாடல். அக்குழந்தைகள் ஏன் ஏதும் பேசாமல் நிற்கின்றார்கள். அவர்கள் செய்யும் குறும்புகளுக்காகத் தந்தை சினந்தாரா? என்று குழந்தைகளைக் கேட்கிறது பாடல்.

120. “தமிழ்மகனாய் உள்ள தம்பியே, உன்னை நம்பி நாடு உள்ளது. நீ குள்ள மனத்தினன் இல்லை; நாட்டுக்குழைத்திடும் நல்லோனாய் நீ வாழ்ந்து புகழ்பெறு நல்லார் இடத்தில் நீயும் ஓர் இடம்பெறு”- என்கிறார் பாவலரேறு!

121. தமிழ்ச்சிட்டு அட்டைப்படப் பாடல், பள்ளிப்பிள்ளையைத் தூயதமிழ் பாடித் துள்ளி ஆடச்சொல்லுவதாய் உள்ள பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/25&oldid=1424491" இலிருந்து மீள்விக்கப்பட்டது