பக்கம்:கனிச்சாறு 5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


9  மலை !

வானைத் தொட்டு நிற்கின்றாயே மலையே - நீ
வளர்ந்த வகை என்ன வென்றே உரையே!
தூணைப் போல வானக் கூரை தாங்க - உன்னைத்
தூக்கி நிற்க வைத்த வர்கள் யாரோ?

கடலைத் தோண்டிப் போட்ட கல்லு மண்ணோ? -நீ
காற்றடித்துச் சேர்ந்த குவியல் தானோ?
இடம் பெயரா திருந்த விடத்தில் இருப்பாய்! - மேல்
ஏறிப் போகும் மாந்தர் நிலையைப் பொறுப்பாய்!

பறந்து திரியும் முகில்கள் உன்றன் மடியில் - வந்து
படுத்துத் தூங்கும் அழகு நல்ல அழகே!
இறங்கி வழியும் அருவி என்னும் குழந்தை - நீ
ஏந்திப் பெற்ற இன்பக் குழந்தை தானோ?

தேனிருக்கும்; கனியிருக்கும்; உம் மேல்! - நல்ல
தேக்கிருக்கும்; பாக்கிருக்கும்; துள்ளும்
மானிருக்கும்; மருந்திருக்கும்; உன்னால் - என்
மனத்திருக்கும் துன்பம் நீங்கும் மலையே!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/44&oldid=1424836" இலிருந்து மீள்விக்கப்பட்டது