பக்கம்:கனிச்சாறு 5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11


10  காற்று!

காற்றே! உன்னைப் பெற்றது யார்!
காட்டில் மேட்டில் விட்டது யார்?
ஊற்றைப் போலப் பெருக்கெடுத்தே
உலாவப் போகும் கதை என்ன?

தேக்கம் இன்றித் திரிகின்றாய்;
தெரியா தெங்கும் நுழைகின்றாய்;
தூக்கம் என்போல் கொள்வாயோ?
தூங்கா தெங்கும் செல்வாயோ?

குழந்தை கண்ணில் குளிர் செய்வாய்;
குன்றைப் பிய்த்தே தூள் செய்வாய்;
பழங்கள் உலுக்கி உதிர்க்கின்றாய்!
பாட்டியைத் தள்ளிச் சிரிக்கின்றாய்?

முகிலாம் பஞ்சின் மூட்டைகளை
மேலே உருட்டிப் போகின்றாய்!
தவிக்கும் உலக உயிர்களுக்குத்
தண்ணீர் பிழிந்தே தருகின்றாய்!

உலகில் மென்மை நீயேதான்!
உலகில் வன்மை நீயேதான்!
உலகின் மூச்சே! உருவற்ற
உயிரே! காற்றே! பழம் பொருளே!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/45&oldid=1424837" இலிருந்து மீள்விக்கப்பட்டது