பக்கம்:கனிச்சாறு 5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  39


42 குருவி!

குருவி! குருவி! அருகில்வா!
குறுநெய் தருவேன் வாங்கிப்போ!
நெல்லைப் போன்ற உன்மூக்கும்,
நெல்லிக் காய்போல் உன்தலையும்,
கொய்யாப் பிஞ்சைப் போல் உடலும்,
குழந்தை இடத்தில் காட்டவா!

சுறு சுறுப்புப் பிள்ளைநீ!
சோம்பல் என்றும் இல்லையே!
பறந்து பறந்து செல்லுவாய்!
பாட்டு ஒன்று சொல்லுவாய்!

-1970


43  கடல்!

தம்பி, தம்பி கடலைப் பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப் பார்!

வெள்ளைக் குதிரை போலவே
விழுந்து புரளும் அழகைப் பார்!

நீலப் பாயின் மேலேறி
நீட்டிப் படுக்கும் அலையைப் பார்!

கோலக் கடலின் மடிமீதில்
குதித்து விழுகும் அலையைப் பார்!

நீர்க்குள் புரண்டே களைத்துப் போய்
நிலத்தைத் தாவும் அலையைப் பார்!

கரையின் மடியில் புரள்வதைப் பார்!
கடலுள் மீண்டும் உருள்வதைப் பார்!

தம்பி, தம்பி கடலைப்பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப்பார்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/73&oldid=1424880" இலிருந்து மீள்விக்கப்பட்டது