பக்கம்:கனிச்சாறு 5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


விட்ட செருப்பைத் தொட்டுக் கொண்டு
வெளியிற் போக எண்ணினால்,
பட்டை பிய்ந்து தொங்கும்; எலியின்
பற்கள் தெரியும்; எண்ணலாம்!

குஞ்சு பொறிக்கும்; குடும்பம் பெருக்கும்!
கூத்தும் பாட்டும் இரவுதான்!
மிஞ்ச விட்டால் எலிகள் தொல்லை
மேலும் மேலும் வரவுதான்!

-1973


49  நிலா!

பொட்டு நிலா! பொட்டு நிலா!
போவ தெங்கே? சொல்வாய்!
வட்ட நிலா! வட்ட நிலா!
வருவேன் கொஞ்சம் நிற்பாய்!

துணையில் லாமல் விண்மீன் காட்டில்
தனியாய்ப் போவது எங்கே?
அணையில் லாதவானக் கடலில்
அலைந்து போகும் சங்கே!

பள்ளிக் கூடம் போகின் றாயோ?
பையை எங்கே காணோம்?
வெள்ளிக் குடமே! மிதந்து செல்வாய்!
விரைவேன், துணையாய் நானும்!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/78&oldid=1424439" இலிருந்து மீள்விக்கப்பட்டது