பக்கம்:கனிச்சாறு 7.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


96

பாவாணர்க்குத் துணைநிற்பதே
பைந்தமிழ்க்குத் துணைநிற்பது!


பாவாணர் ஒருவர்க்குத் துணைநிற்பதே - நம்
பைந்தமிழ்க்குத் துணை நிற்பது! - தமிழ்
காவாத ஒருவற்குத் துணை நிற்பதோ - ஒரு
கல்லுக்குத் துணை நிற்பது!

நெல்விளை வயலுக்கு நீர் வார்ப்பதே - தேவ
நேயர்க்குத் துணை நிற்பது! - ஒரு
புல்விளை கரம்புக்கு நீர்வார்ப்பதே - ஒரு
பொய்யற்குத் துணை நிற்பது!

தமிழ்வாழும் முயற்சிக்குத் துணை சார்வதே - இனத்
தழைப்பிற்கு நீர் வார்ப்பது! - பொய்
உமிழ்கின்ற வாயர்க்குத் துணையாவதோ- ஓர்
ஒழுகையில் நீர் சேர்ப்பது!

உரமுள்ள நெஞ்சிற்குத் துணைபோவதே, நாம்
உண்மைக்குத் துணை போவது! - கீழ்த்
தரமுள்ள நினைவிற்குத் துணைபோவதோ - ஒரு
தக்கைக்குத் துணை போவது!

அறங்காக்கும் உழைப்போடு கைகோப்பதே - உயர்
ஆக்கத்திற் கெரு சேர்ப்பது! - மன
நிறமாற்றும் கோழைக்குப் படைசேர்ப்பதோ - வீட்டு
நெருப்புக்கு நெய் வார்ப்பது!

இருளுக்கு விளக்காவார்க் கிணைநிற்பதே உயிர்
எழுச்சிக்குத் துணை நிற்பது! - வரும்
பொருளுக்கும் புரையோர்க்குப் புணையாவதோ - வெறும்
புழுவுக்கு நிழல் சாய்ப்பது!

பொதுவான மதிலுக்குக் கல்சேர்ப்பதே - பொது
விருந்துக்கு நெல் சேர்ப்பது - தன்
புதிதான வாழ்வுக்குப் பொருள் சேர்ப்பதோ - வரும்
புகழுக்கே இருள் சேர்ப்பது!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/177&oldid=1446250" இலிருந்து மீள்விக்கப்பட்டது