பக்கம்:கனிச்சாறு 7.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  139


102

நாவை சிவம் வாழ்க!


நாவை சிவம்எனும் நறுந்தனித் தமிழ்மகன்
ஆவியும் உடலும் அருந்தமிழாகி
மொழியினம் நாடெனும் முப்படிக் குழைக்கும்
பழியிலா வாழ்வில் பன்னாட் பழகி
இனியதொண் டாற்றும் ஏந்தலாய் நின்றான்!
கனிய உரைசெயும் கசடிலா நெஞ்சினன்,
அன்புறும் வாழ்வினன்; அருமைப் பாவலன்!
தன்பெரும் முயல்வாய்த் தனித்தமிழ்ப் புலமை
பெற்றுத் தேறிப் பெருமையும் பெற்றான்!
கற்ற கல்வியும் கவின்பெறு கொள்கையும்
விற்றுப் பிழைக்கும் வீணர்க ளிடையில்
உற்ற பெருமையால் ஊரவர்க் குழைக்கும்
நற்றமிழ்ப் பாவலன் நாவை சிவம் எனும்
நெற்று முளைத்து நிழல்தரு மரமாய்
பல்கிப் படர்ந்து பைந்தமிழ்த் தொண்டெனும்
மல்கு நறுங்கனி மாந்தர்க் குகுக்கவே!

-1978




103

பெரியார் பிறந்தார்;
பிறந்தது உள்ளொளி!



பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
நரியார் நாயகம் இங்கே நடந்திடும்!
திரியாத் தமிழ்க்கும் திகழ்நா டதற்கும்
உரியார் நாமெனும் உண்மை, பொய்த் திருக்கும்!
ஆரியர்க் கின்னும் அடியராய்க் கிடப்போம்!
பூரியர் புராணப் புளுகுக் குப்பையுள்,
சாதிச் சகதியுள், சமயச் சேற்றினுள்,
புதையுண் டிருப்போம்! புழுக்களாய் இருப்போம்!
சிதைவுற் றிவ்வினம் சிதறுண் டிருக்கும்!
பெரியார் பிறந்தார்! பிறந்தது உள்ளொளி!
அரியார் நாமெனும் ஆக்கமும் சிறந்ததே!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/184&oldid=1446977" இலிருந்து மீள்விக்கப்பட்டது