பக்கம்:கனிச்சாறு 7.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


121

பாவேந்தர் பதிகம்!


மூவேந்தர் எல்லாரும் மீண்டும் பிறப்பெடுத்துப்
பூவேந்த ராய்ஆட்சி பூண்டாலும் - பாவேந்தே!
உன்போல் புகழ்பெறவும் ஒல்லுமோ? ஒண்டமிழில்
மின்போல் கதிர்போல் மிளிர்ந்து!

புலக்கிழவர் எல்லாரும் பூந்தமிழில் நல்ல
இலக்கியம் அன்றோ முன் ஈந்தார்! - கலைக்கோவே!
நீயன்றோ பெய்தாய் இலக்கியத்தில் செந்தமிழைத்
தாயீன்ற வகையாகத் தந்து!

‘நல்லுயிரும் நல்லுடம்பும் நற்றமிழும் ‘நான்’, என்று
சொல்லியன்றோ நீஉயிர்த்தாய், சோர்வின்றி! - வல்லியனே!
செந்தமிழை உள்ளுயிராய்ச் செப்பியதார் உன்போல்?
வெந்ததுண்டு வாழ்வர்,(அ)தை விற்று!

இனிமைத் தமிழில் எளியசொல் கூட்டித்
தனிமைச் செந்தமிழ்ப் பா தந்தாய்! - பனிமலரே!
உள்ளம் குளிர்வதுபோல் ஒண்டமிழை வாழ்வித்தாய்!
கள்ளம் கவடின்றிக் காத்து!

தொழிலா ளர்உயரத் தோள்தந்தாய்! அன்னார்க்(கு)
எழிலார் இலக்கியமும் ஈந்தாய்! - பொழில் ஆரும்
தென்றலுலா வந்ததுபோல் திங்கள்வான் நீந்துதல்போல்
என்றென்றும் வாழ்வாய் இருந்து!

பாவியமும் நாடகமும் பாடல் பலநூறும்
ஆவியுமாய்ச் செந்தமிழாய் ஆர்ந்து, வண்ண ஓவியமாய்த்
தந்தாய்! ஒளிர்ந்தாய்! தமிழ்மொழிக்குத் தந்தைபோல்,
எந்தாய் போல்,என்றும் இரு!

எந்தமிழுக் கேற்றம் இனத்துக்கு மீட்சிதரச்
சொந்தநலம் எண்ணாமல் சோர்வின்றித் - தந்தபெரும்
நல்ல இலக்கியங்கள் நந்தமிழர் வாழ்வுயர்த்தும்;
வெல்லும்; பகைக்கெறிந்த வேல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/205&oldid=1447013" இலிருந்து மீள்விக்கப்பட்டது