பக்கம்:கனிச்சாறு 7.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

“ரண்டி, ரண்டி” என்றிடுவார் ஒருவர் “ஈதர்
ஆவ் ஜீ"” என்பார் ஒருவர்; வந்து நின்ற
வண்டியினின் வந்தவரைச் சென்று பார்த்(து) “ஐ
வெல்கம் யூ” என்றிடுவார் தமிழைக் காணேன்!

ஆங்கிலத்தில் அரைகுறையாய்ப் பேசுவோர்கள்!
அதுவிளங்காத் தெலுங்கினிலே விடைசொல் வோர்கள்;
காங்கிரசு உடையணிந்தார் இந்தி பேசிக்
களித்திருப்பார்! அண்டையுள்ள பெண்கள் எல்லாம்
பாங்கோடு செல்லுகையில் உதட்டுச் சாயம்
பூசிப்பின் கண்ணாடி பார்ப்பார்! ஈதை
யான்கண்டு மனம்புழுங்கி நின்றேன்; செம்மை
யறிவுள்ள செந்தமிழ்த்தேன் நாடாம்; ஈதோ?

விரிந்துள்ள பாதை! ஒரு மருங்கினின்று
விரைந்து வரும் இயங்கிகளோ தொடர்ந்து காணும்
சரிந்துவிழும் போலவரும் பின்னி யங்கி!
சாலையின திருமருங்கும் மக்கள் கூட்டம்!
வரிந்தபடி இடுப்பினிலோர் வேட்டி கட்டி,
வண்டிகளை மாடுகள்போ லிழுத்துச் செல்வர்!
புரிந்துவரும் புன்னகையால் குடைகள் ஆட்டிப்
போவதுமாய் இருப்பதுமாய் இருப்பர் பெண்கள்!

“கோட்டுகள்”மேல் தொங்கும்! ஒரு நீண்டசட்டை
குதிகால்கள் தெரியாது தொங்கும்; வாயில்
பாட்டு தெறித் தோடுமதன் ‘பாணி’வேறு!
பார்க்குமிட மெல்லாம்ஆங் கிலமே தோன்றும்!
‘சேட்டு’களும், தெலுங்கர்களும் அவர்கள் பேச்சில்
சொல்லிமகிழ் வெய்திடுவார்! தமிழர் மேலை
நாட்டுமொழி பேசிடுவார் நாடோ சென்னை!
நடப்ப தெல்லாம் ‘மதராசு’ம் ‘மெட்ராசும்’மாம்!

மக்களுடை ஆங்கிலத்தைக் காட்டும்; மக்கள்
மனத்தினிலே ஆங்கிலநீ ரோட்டம்! பேச்சில்
திக்கிவரும் ‘வார்த்தைகள்’, பத் தென்றால், பாதித்
தெலுங்கினிலும், ஆங்கிலத்தில் மூன்றும் போனால்
சிக்கியிருக் குமிரண்டு தமிழுங் கூடச்,
சரிக்குநிகர் வடமொழியாம்! தேடித் தேடித்
திக்குமுக்க லாடிவிட்டேன் தமிழைக் காண!
தெருவெல்லாம் தமிழ்த்தெருவே உருவம் வேறு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/59&oldid=1446011" இலிருந்து மீள்விக்கப்பட்டது