பக்கம்:கனிச்சாறு 7.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23


13

பாடியடங்கிய வாய்!


பாடி யடங்கிய வாயொடும் பன்னாட் பகலிரவாய்
ஓடி யடங்கிய காலொடும் ஒண்டமிழ் ஓங்கிடவே
நாடி யடங்கிய நெஞ்சொடும் நட்டார் நலம்பெறவே
தேடி யடங்கிய கண்ணொடும் நிற்பேன் திகைப்புறவே! 1

பேசிய யடங்கிய நாவொடும் பேணாப் பெருந்தமிழ்மேல்
மூசி யடங்கிய முன்னுணர் வோடும் முனைப்பிலர்பால்
ஏசி யடங்கிய வெஞ்சினத் தோடும் இரவுபகல்
வீசி யடங்கிய கையொடும் நிற்பேன் வினையறவே! 2

தூக்கிய தூவல் துவண்டிட உள்ளந் துணிவுறவே
ஆக்கிய பாடல் அடுக்கடுக் காய்ப்போய் அயர்ந்தவரை
ஊக்கிய நாள்போய் ஒடுங்கிட உண்மைக் கொருவரையான்
நோக்கிய கண்ணாய்க் குறியாய் அமர்ந்தேன் நொடிந்துளமே! 3

அன்னைமுன் தந்த அமிழ்து புளித்ததிங் காருயிரைப்
பின்னிய தீந்தமிழ் பின்னும் இனித்தது; பின்னுணர்வில்
என்னைப் பிணித்ததும், என்னைஅணைத்ததும் என்னுளத்தில்
தன்னைக் குடிவைத்துக் கொண்டதும் அற்றைத் தனித்தமிழே! 4

ஆடித் துளும்பிய நல்லுணர் வெல்லாம் அடங்கினவே!
பாடித் தெறித்த பசுந்தமிழ்ப் பாக்கள் படிந்தனவே!
காடிப் புளிப்பினை உண்டு கசந்தேன்; கனிவிலர்பால்
ஓடித் தொழுவதோ? வீழ்வதோ ஒண்டமிழ் உய்வுறவே! 5

உள்ளமிங் கொன்றி உணர்வதும் ஒன்றி உரைத்ததமிழ்
வெள்ளமிங் கொன்றி வினைமுடி வொன்றி விளக்கமிலாக்
கள்ளமில் அன்புங் கலந்துயிர் ஒன்றிக் கனிகையிலே
கொள்ளலு முண்டோ மனக்குறை வேநெஞ்சக் கொள்கலனே! 6

மெய்தொட்ட உள்ளமும் மின்தொட்ட தாய்த்தொட்ட வல்லுணர்வும்
பொய்விட்ட நெஞ்சும் புரையிலாச் சொல்லும் புரிந்தவரே!
வெய்பட்ட போதெல்லாம் தண்ணிழல் காட்டி விரித்திருந்த
கைப்பட்ட தால்வெறுந் தெள்ளிடு மோசுடர்க் கண்விழியே! 7

-1961
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/68&oldid=1446020" இலிருந்து மீள்விக்கப்பட்டது