பக்கம்:கனிச்சாறு 7.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

நாவொடும் வினையொடும் மனத்தொடும் ஒன்றிய
நல்லுணர் வாளனை அறிவினும் ஆய்குவர்!
பாவொடும் ஊறிய பைந்தமிழ் மைந்தனை
பயன்படுத் தும்வகை அறிகிலாப் பேதையர் 4

சொன்னசொல் யாப்பொடும் கோப்பொடும் மிளிர்ந்திடும்;
சுடர்விடும் கதிரதில் கோடி ஒளிர்ந்திடும்!
மின்னியுள் ளத்துளே தோன்றி மெருகிடும்
மீவொளிக் கீற்றுகள் நூறுநூ றாயிரம்!
முன்னிய எண்ணி முடிப்பதற் குள்ளுளம்
மூண்டிடும் கோடியங் கோடிச் சிதறல்கள்!
என்னிலை எதுவெனும் ஏற்றமி லாதவர்
என்றனைப் புறத்திலே இதுவெனப் பிதற்றுவர்! 5

மண்ணை யறிந்தவர் மண்ணென மதிக்குவர்;
மலரை நுகர்ந்தவர் மணமெனக் கூறுவர்.
திண்ணை யறிந்தவர் திசைப்பரப் பறிவரோ?
திவலை அளப்பவர் திரைகடல் அளப்பரோ?
கண்ணை யறிந்தவர் கதிரொளி தெளிவரோ?
காற்றை யறிந்தவர் கடும்புயல் நிறுப்பரோ?
மொண்ணை யறிந்தவர் முழுக்கூர் உணர்வரோ?
முகட்டை யறிந்தவர் முழுவான் காண்பரோ? 6

நான்ஒரு பெரும்புதிர்! தனிக்கதிர்! தமிழின
நன்மையை நாடிப் பிறந்துள நல்லுயிர்!
வான்படு கதிர்மதி வன்மையும் தண்மையும்
வந்திணை யாளுமோர் ஆட்சியுட் படும்உயிர்!
கூன்படு கொள்கையும் குழைவதும் நெளிவதும்
குடற்புழை மானம்விற் றடைத்திடும் குறுமையும்
ஊன்படு வாழ்க்கையில் ஒருதுளி யிலாஉயிர்!
உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் உயிர்க்குயிர்! 7

மண்தரை கால்படும்; மனம்வான் வெளிபடும்!
மனம், அறி(வு) இணைந்துவாய் மண்டுரை பொழிதரும்!
புண்புரை யாளரைப் புளுகரைப் பொய்யரைப்
புகுமுகம் புரிந்திடும் புல்லரைப் பொருதிட
கண்பொறை கழன்றுதீக் கனன்றிடுஞ் சொல்வரும்!
கனிவினால் நல்லுள மாந்தரைக் காத்திடும்!
பண்புறை மனம்; ஒழுங் குடல்; ஒளி நிறைபுலன்;
பணியுமன் பறிவெனில்; பதைக்குமற் றெதற்குமே! 8

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/95&oldid=1446086" இலிருந்து மீள்விக்கப்பட்டது