பக்கம்:கனிச்சாறு 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


குந்தக் குடிசையின்றிக் கொல்பசிக்குக் கூழின்றி
நொந்திருக்கும் ஓர் கூட்டம்! நோகாமல் மற்றொன்று
தொப்புளுக்கும் கீழாகத் தோள்வரைக்கும் தானுண்டு
கொப்புளிக்கப் பன்னீரைக் கேட்பதென்றால் யார் குற்றம்?
ஆள்வோர்கள் சட்டம் அரைநொடியில் அந்நிலையைத்
தூள்தூளாய்ச் செய்யாதா? தோல்விவந்து நேர்ந்திடுமா?
விண்வெளியும் விண்ணின்று வீழும் மழைத்துளியும்
நுண்ஒளியும் காற்றும் - எனும்பூத நுகர்ச்சியைப்போல்
மண்வெளியும் இங்கெல்லா மக்களுக்கும் சொந்தமென்றும்,
உண்வழியை எல்லாம் உழைத்தடைய வேண்டுமென்றும்,
ஏனிங்கோர் சட்டம் இயற்றிவிடக் கூடாதாம்?
ஏனிங்கோர் கூட்டம் எதிர்த்துரைக்க வேண்டுமிதை?

மண்ணுடைமை ஒன்றன்றோ மற்றுடைமை யாவைக்கும்
நண்ணுடைமை யாகநின்று நம்முயர்வை வீழ்த்தியது?
மண்ணைப் பொதுவென்றால் மண்விளைவுந் தான் பொதுவாம்!
பண்ணை முறையில் பயிர்விளைவும் கண்டிடலாம்!
அக்காலை ஏழையென்றும் ஆங்கொருவன் செல்வனென்றும்
செக்காலை மாடுகள்போல் சென்றுவரல் ஏலாது!
செல்வன் இருப்பானேல் ஏழ்மையும் சேர்ந்திருக்கும்!
செல்வம் எவரிடத்தும் சேர்ந்திருத்தல் கூடாது!
எல்லார்க்கும் ஊண் உடைகள், எல்லார்க்கும் வாழ்மனைகள்;
எல்லார்க்கும் வாழ்க்கை எனில், உழைப்பும் எல்லார்க்கும்;
என்றிங்கே ஆகுமட்டும் என்னெழுதி, என்பேசி,
வென்றுவிடப் போகின்றோம்? வீணவைதாம் என்றிடுக!
கற்றோர்கள் இந்தக் கணக்குவிடை கண்டிலரேல்
மற்றோர்கள் ஓர்நாள் மளமளனெத் தாமெழுந்து
கற்றோரின் முன்பே கணக்கெழுதித் தீர்ப்பார்கள்!
வெற்றுரை அன்று விளைவுரையே என்றுணர்க!

அந்தநாள் மட்டும் அடிபிடிகள் சண்டைகள்தாம்!
எந்தநாள் ஆனாலும் எத்தனைநாள் போனாலும்
அந்த ஒருநாள் அனைவருக்கும் நல்லநாள்
வந்துதான் தீரும் வரவேற்க நாமெல்லாம்
காத்திருப்போம்; உள்ளம் கனிந்திருப்போம்; அந்நாளில்
பூத்திருக்கும் இன்பம் பொலிந்து!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/100&oldid=1448112" இலிருந்து மீள்விக்கப்பட்டது