பக்கம்:கனிச்சாறு 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


இன்பம் பெறுவதும் இன்பந் தருவதும்!
எனவே அறிஞரை ஏற்றப் படுத்தினோம்!
கனவாய் இருந்ததைக் கல்லாய் நிறுத்தினோம்!
கல்லென் றாலும் சில்லாய்ப் போமென
வல்ல செம்பொனால் வடிவம் ஆக்கினோம்!

இங்கொரு கருத்தை எதிர்வைக் கின்றேன்:
திங்களும் கோளும் செல்கையில், இங்ஙன்
படிமமும் வடிவமும் பாங்குற நிறுத்தி
அடிதொழல் அறிவா? அன்பா? - ஆங்கதால்
எய்துறும் பயனோர் எள்மூக் கத்துணை
கொய்திட வருமோ? - என்றொரு கொள்கையர்
கேட்டு நிற்கலாம்! இனுஞ்சிலர் கிளர்ச்சியால்
நாட்டு நன்னலம் நாடுவோர் போல
உயிரோ டிருக்கையில் ஒருபயன் நல்கார்
உயிரது கழிந்தபின் உருவம் நிறுத்துதல்
என்னோ? என்னோ? - எனமுழக் கிடுவார்!
இன்னவர்க் கொன்றிங் கியம்பிடல் வேண்டும்!

முதற்கண் திங்களும் கோளும் முழக்கிடும்
எதற்கு, எது, ஏன்? எனும் எதிர்நெறிக் கொள்கையர்
தமக்கொரு கருத்தைச் சாற்றிடு கின்றேன்!
உமக்கெலாம் உண்மை உணர்த்துதல் எம்கடன்!

திங்களும் கோளும் செல்வதும் சிறப்பே!
இங்குள அறிஞரை, ஏத்தலும் சிறப்பே!
முன்னதே அறிவாம்; பின்னதோ அன்பாம்!
இன்னது இதற்கென இறப்ப அறியாது
என்னது ஏன்என - எடுத்ததற் கெல்லாம்
பன்னிப் பன்னி வினாவையே பன்னுதல்
முன்னிய அறிவென மூண்டு விடாது!
நன்னர் ஆய்ந்தால் நமக்கு இவ் வுலகில்
நெருப்பும் வேண்டும்; நீரும் வேண்டும்!
விருப்பும் வேண்டும்; வெறுப்பும் வேண்டும்!
நட்பும் டும் பகையும் வேண்டும்!
கட்படு வனசில; கட்படா தனசில!

நீரைக் காய்ச்சிட நெருப்பே உதவும்!
நெருப்பை அவித்திட நீரே உதவும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/102&oldid=1448115" இலிருந்து மீள்விக்கப்பட்டது