பக்கம்:கனிச்சாறு 8.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89


மெய்யை விரும்பவும் பொய்யை வெறுக்கவும்
நல்லநட் பாடவும் தீயன பகைக்கவும்
வல்ல இருதிறன் வாய்த்தலே நன்றாம்!
எவைஎவை எதற்கென எண்ணாது கொளாது
“அவையவை யெல்லாம் அறிவற் றார்செயல்;
எவைதாம் எனினும் இங்கிருப் பவையெலாம்
கவைக்குத வாதன; கடலோ வானமோ
தாண்டி வருபவே தக்கவை” என்றால்,
ஈண்டிங் கிருப்பவர் யாவரும் மூடரோ?

“வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்;
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்!”


- என்று முழங்கிய புரட்சிப் பாவலர்
நின்று முழங்கிய சொற்களை நினைமின்!

திரு. வி. க. வெனும் திருமிகு தலைவர்
ஒருதொழிற் புரட்சியை உண்டாக்க வில்லையோ?
உருசிய மண்ணும் சீன மண்ணுந்தாம்
பொருளறி வுற்றவோ? பிறவெலாம் பொக்கோ?

எதற்குச் சொல்கிறேன் - திரு. வி. க. என்போர்
சிதற்கும் பலிலே கட்டைச்செவ் வெறும்பு!
தொழில்,தொழி லாளர் எனின்தோள் புடைத்துப்
பொழிலென உள்ளம் புலர்ந்தெழும் தலைவன்!
இந்தியா முழுவதும் இணைதொழில் இயக்கம்
முந்திக் கண்ட முதுபெரும் புரட்சியோன்!
அவரைப் போற்றுதல் ஆகா தெனின்,வே
றெவரைப் போற்றுதல் ஏற்றதாம் என்பீர்?

அடுத்து, ஒரு கருத்து பொதுவாய் அறைவது!
“எடுத்ததோ எடுத்தீர், இருந்தபோ தெடுத்தீரா?
செத்தபின் தானே சிலையெடுக் கின்றீர்!
செத்தபின் தானே சிறப்புச் செய்கிறீர்?”

- என்பதக் கருத்து! இஃது ஏற்ற கருத்துதான்!
மன்பதை நினைதகும் மாசிலாக் கருத்துதான்!
இருப்பினும் இறந்தபின் படிமம் எடுப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/103&oldid=1448116" இலிருந்து மீள்விக்கப்பட்டது