பக்கம்:கனிச்சாறு 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


விருப்பின் நிகழ்வதாம், வினையும் தூயதாம்!
உயிரோ டிருக்கையில் பாராட்டும் உவகையில்
செயிர்தீர் சான்றோர் ஆயினும் செருக்கினால்,
தன்வினை தளர்ந்து தன்முனைப் பெழுந்து
மன்வினை மறந்து, மற்று, அவர் அறிவே
உயர்ந்தது சிறந்தது ஒருகா லத்தும்
பெயரா நிலைப்பது; பிறவெலாம் பொய்ப்பது!

என்று நினைப்பவர் ஆகி இழிகிறார்.
நன்றினும் தீது நண்ணியே இருக்கும்!
எவ்வா றாயினும் இருக்குங் காலை
ஒவ்வா ராயினும் ஒப்பார் போலப்
பொருள்கொடுத் தேனும் புகழ்பெறத் துடிப்பர்!
மருள்தீர் அறிவும் மனமும் அன்றி,
உடல்நசை மிகுப்பால் . உலகியல் விருப்பால்
கெடலுறும் நடுநிலை! கேடும் செய்வார்!
ஆகவே மறைந்தபின் அறிஞரைப் போற்றுவர்!

சாகவே வேண்டும் எனயாம் சாற்றிலம்!
இருக்குங் காலை அறிவினை ஏற்றுப்
பெருக்க விதைத்திடப் பெய்தலே சாலும்!
புகழ்ச்சி என்பது தேவையில் புனைவே!
இகழ்ச்சி என்பது ஏற்றவர் செயலிலை!
ஒருவர்தம் அறிவின் உழைப்பையெல் லாரும்
பெறும்படி செய்வதே போற்றலிற் பெரியது!

மற்று, அவர் வாழ்க்கையில் மலைமலை யாக
வெற்றுப் புகழ்ச்சியை வீணே குவிப்பது
என்ன பயனையும் விளைத்தலிங் கில்லை;
கன்னலும் செந்நெலும் கழனி தருவதால்
எரு, நீர் இடுவமா? புகழ்ச்சியை இறைப்பமா?
திருவுடை யார்க்கெனின் தேவை புகழ்ச்சியே!
அறிஞர் தமக்கெனில் ஆக்கத்திற் குறுதுணை
செறியத் தந்து செறியப் பெறுதலே
சிறந்தது! ஆதலால் செத்தபின் புகழ்ந்தனர்!
இறந்தபின் புகழ்வதால் இறுமாப்பும் இராது!
புகழ்பெறார் தமக்குப் பொறாமையும் ஏழாது!
தகவும் அதுதான்; தகைமையும் அதுதான்!
சொல்லுதல் யாவரும் சொல்லலாம்; சொற்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/104&oldid=1448117" இலிருந்து மீள்விக்கப்பட்டது