பக்கம்:கனிச்சாறு 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  91

வெல்லுதல் காலத்து விளையும் நிகழ்ச்சியாம்!
ஈங்கிது நிற்க!
                     - இனி நாம் செய்தியைத்
தாங்கிப் பேசுவோம்! தகவுடைப் பெரியீர்!

பட்டி மன்றின் நடுமையைப் பற்றி
நெட்டுயிர்ப் புயிர்க்கும் நிலையினில் உள்ளேன்!
கொண்ட தலைப்போ கோடாத தலைப்பு!
கண்ட கண்ட தலைப்புகள் தந்து,
‘மண்டோ தரியா, சீதையா, கற்பில்
விண்டவர் யார்’
- என வினாவொன் றெழுப்பிப்
பட்டி மன்றினால் பரபரப் பூட்டி
வெட்டிக் கதைகளை விடிய விடிய
ஆயிர மாயிரம் ஆண்டுகள் பரப்பி
வாயுரம் பெற்றதே அல்லால் வாழ்க்கையில்
அடிமைநீங் கிற்றா? அறியாமை பெயர்ந்ததா?
மிடிமை செத்ததா? மேல்கீழ் என்னும்
குடிமை கொல்லும் கொடுமை தவிர்ந்ததா?
இல்லையே! பின்னும் ஏனிந்த ஆய்வுகள்?
சொல்லையே தவிர்க்கையில் பொய்களைச் சொல்வதா?
எல்லாரும் இன்புற் றிருக்க எண்ணிக்
கல்லையும் மண்ணையும் காதில் திணிப்பதா?
அப்படி யில்லா அருமைத் தலைப்பிதாம்!
ஒப்புமோர் தலைப்பே! உயர்ந்த தலைப்பிது!

திரு. வி. க. வெனும் திருவுடைத் தலைவனின்
பெருமைத் தொண்டெலாம் பெற்றது மொழியா?
பொதுமை நெறியா ?
- எனும் புதுத் தலைப்பு!

“மொழித் தொண்டு” என்று மொழிகுவர், கோவை
இளஞ்சேரல், இறைக்குரு வர், தொல் காப்பியர்!

களஞ் சேர் மரபினால் ‘பொது’ - எனக் கழறுவர்
பாலசுந் தரனார், பன்னீர்ச் செல்வனார்,
ஞானச் செல்வராம்
நற்றமிழ்ப் பாவலர்!
தவமென வாழ்வையே தவறிலா நடத்தியோர்
திரு.வி.க. . வெனும் திருமா முனிவர்!
அன்னவர் ஆற்றிய மொழித்தொண் டாய்ந்து
பின்அவர் ஆற்றிய பொதுத்தொண்டு பேசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/105&oldid=1448118" இலிருந்து மீள்விக்கப்பட்டது