பக்கம்:கனிச்சாறு 8.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


அறிஞர் பாவலர் புலவர் ஆகின்ற
செறிவுறு பட்டி மன்றிது; சிறப்புறக்
கூறுவ தென்னின் குறைவிலாப் பாவினால்
ஏறுகள் பொருதும் எழிற்பா மன்றமாம்!

சொல்தெறித் தோடும்; பொருள்மழை சொரியும்
வில்தெறித் தம்பு விரைவது போல
எதிரெதிர்ப் பாயும் எந்தமிழ்ச் சொற்கள்!
புதிரினிற் புதிரும் புதுமையிற் புதுமையும்
கேட்போர் நெஞ்சைக் கிளர்வுறச் செய்யும்!
வாட்போர் எனும்படி வாய்ப்போர் நிகழும்!
மற்போர் கண்ட மனமெல்லாம் மலைக்கச்
சொற்போர் பாச்செறி சுவைப்போர் காண்க!

கோவை இளஞ்சேரன் திரு.வி.க. வாழ்வின்
பெரும்பங்கு மொழித்தொண் டென்று பேசுவார்!
அவர் அணித் தலைவர்! அவருக் குப்பின்
பொதுத்தொண் டென்று பாலசுந் தரனார்,
எதிர்அணித் தலைவர் - எதிர்நின் றியம்புவார்!

முதற்கண் பாவலர் கோவை - பாக்கோவை,
கோவை இளஞ்சேரன் எனும் பாக்
கோவை அழைப்பேன் கொள்கை சாற்றவே!

(கோவை இளஞ்சேரனின் பாத் தருக்கம்)
(அது முடிந்து, பாலசுந்தரனார்க்கு அழைப்பு)


அடுத்தவர் புலவ ரேறு
ஆன்றவிந் தடங்கு கொள்கை
எடுத்தவர்; எந்த மிழ்த்தாய்
ஏற்புற எழிற்பா மாலை
தொடுத்தவர்; அவரை யாம் போய்த்
தொடுக்கநும் கருத்தை யென்றே
விடுத்தனம் வேண்டு கோளே!
விளைவிப்பார் கருத்தை! கேட்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/106&oldid=1448119" இலிருந்து மீள்விக்கப்பட்டது