பக்கம்:கனிச்சாறு 8.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘தென்றலடிக்கையில் பச்சிளங்கீற்றுச் சிலிர்த்து
நிலைகுலைந் தாடுதல் போல்....’

‘அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடங்கும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன்
சிந்தை, உடல் அணுஒவ்வொன் றுஞ் சிலிர்க்கச்

செல்வம்ஒன்று தவழ்ந்துவரும் அதன்பேர் தென்றல்!’

(வேறு)


இனி,
பாவேந்தர் உள்ளத்துள்ளே எரிமலை புகைந்ததென்றால்
ஈவாக என்னநிற்கும்? என்பதை அறிய வேண்டும்!
சாவேந்திச் சென்ற தந்த தனிமகன் தனையென்றாலும்
தூவுந்தீக் கனப்பால் இன்றும் துவைகின்றார் பகைவர் அன்றோ?

(வேறு)


எரிமலைக் குமுறலை இதோ; இவண் காணுக!:

‘எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணை!

இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே!”

அடுத்தொரு குமுறலை அதோ கேளுங்கள்!

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’

‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!

செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’


அடுத்து, அவர் புரட்சிப் பாவலர் ஆகிக்
கடுத்த நெஞ்சொடும் கனலொடும் பேசுவார்!

“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு!

பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்

தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/118&oldid=1448457" இலிருந்து மீள்விக்கப்பட்டது