பக்கம்:கனிச்சாறு 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

ஊமையரைக் குருடர்களைப் போல்இருட்டில் நாளும்
உண்டுவிட்டு வருகின்றோம்! உள்ளத்தை மாய்த்தோம்!
ஆமையராய்க் கைசோர்ந்து கால்சோர்ந்து போக
அடுப்படியில் காய்கின்ற மனைவிநலம் காவாத்
தீமையராய் - குழந்தைநலம் தீய்த்தகொடி யோராய்த் -
திருடர்களாய் வாழ்கின்றோம்! இதையெண்ணிப் பாரீர்!

எத்தனையோ வாழ்வுநலம் நாம்பெறுதல் வேண்டும்!
என்றென்றும் அடிமையராய்க் கோழையராய் வாழ்ந்தோம்!
எத்தனையோ நாட்டார்கள் - நமக்குப்பின் எழுந்தோர்;
என்னென்ன வகையாக முன்னேறி விட்டார்!
அத்தனைக்கும் கேளாத - காணாத - வாறாய்
அன்றிருந்த படியாக இன்றுமிருக் கின்றோம்!
எத்தனைப்பேர் வந்தார்கள்; சொன்னார்கள்; ஆனால்
ஏனென்று கேட்டோமா? பின்பற்றி னோமா?

ஆனாலும் நமையடிமை செய்திடவந் தார்கள்:
ஆரியர்கள்! அவர்நம்மை அடிமைகொண் டார்கள்!
‘வானாக வந்தவர்கள் தேவர்கள்யாம்’ . என்றார்
‘வாயில்வந்த சமற்கிருதம் தேவமொழி’ . என்றார்
‘ஏனென்று’ கேட்கவில்லை; ‘எப்படி’‘எவ் வாறாம்?’
என்றெல்லாம் கேட்கவில்லை; நம்பிவிட்டோம் அவரை!
கூனாத தமிழ்ப்பெருமை கூனிற்றவர் பேச்சில்!
குடிகெட்டோம்; மதிகெட்டோம்; கொடிவழியும் கெட்டோம்!

நம்பெருமை அவர்கொண்டார்; நாமவரைப் பற்றி
நல்லதில்லாத் தீமைகள் உடன்தழுவிக் கொண்டோம்!
நம்பெருமை தனைவிட்டோம்; நலிந்திழிந்து போனோம்!
நற்பிறப்பு தனைத்தவிர்த்தோம்; நாற்பிறப்புக் கண்டோம்!
செம்பொருள்சேர் தமிழ்மொழியைப் பழித் திழித்துப் பேசிச்
செப்பமிலா வடமொழிக்குத் தலைகுனிந்து நின்றோம்!
அம்பொருளாம் பரம்பொருளுக் கவன்தலைமை யென்றான்!
ஆமென்றோம்; அவர்க்கடிமை ஆகிவிட்டோம், தாழ்ந்தோம்!

எத்தனையோ தெய்வங்கள்! எத்தனையோ சாதி!
எத்தனையோ மூடங்கள்! இழிவுகளும் தாழ்வும்!
அத்தனையும் நாம்எண்ணிப் பாராமல் நம்மை
அணுஅணுவாய் நாள்நாளாய் மிகத்தாழ்த்திக் கொண்டோம்;
இத்தனைக்கும் அடிப்படைதான் என்ன? உணர்ந் தீரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/128&oldid=1448473" இலிருந்து மீள்விக்கப்பட்டது